அவிநாசி:அவிநாசி, சேவூர் ரோடு, சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் கடந்த மாதம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுக்கூடம் திறக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பேரூராட்சியில் அவிநாசியில் புதிதாக டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றம், கேளிக்கை விடுதி என எந்தப் பெயரிலும் மதுக்கூடம் அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.பொதுமக்கள் போராட்டத்தை அறிவித்ததால், வரும், 15ம் தேதி வரை மனமகிழ் மன்றத்தை இடமாற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்படுவதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர். நேற்று சேவூர் ரோடு, செங்காடு திடலில், மனமகிழ் மன்றத்தை உடனடியாக இடம் மாற்ற செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., தவிர மற்ற கட்சி நிர்வாகிகள், கிராமிய மக்கள் இயக்கம், களம், நல்லது நண்பர்கள், துளிர்கள், ஈரம் ஆகிய அறக்கட்டளைகள், பொறியாளர் சங்கம், ரியல் எஸ்டேட் சங்கம், அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் என அனைத்து தரப்பினர் சார்பில், நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மனமகிழ் மன்றத்தை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வரும் 15ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.---அவிநாசியில் 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் செயல்படும் மதுக்கூடத்தை இடம் மாற்ற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.