உடுமலை:உடுமலை வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும், குறிச்சிக்கோட்டை துனை வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உயிர்உரம் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, குறிச்சிக்கோட்டை வேளாண்மை உதவி அலுவலர் அமல்ராஜ் கூறியதாவது:உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் கலசர், பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவை 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.மேலும், ஜிப்சம், நுண்ணுாட்டங்களும், 50 சதவீத மானிய விலையில் உள்ளது. அதோடு, கடப்பாரை-1,மண்வெட்டி- 1, களைகொத்து- 1, கதிர்அருவாள் -2, மண்அள்ளும் இரும்பு சட்டி-1 ஆகியவை கொண்ட விவசாய உபகரணங்கள் தொகுப்பு, 50 சதவீத மானிய விலையில் உள்ளது.வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதை, உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்க தேவையான அளவு இருப்பு உள்ளது.தங்கள் நிலங்களை உழவு செய்யும்பொழுது, டிராக்டர் மற்றும் உழவு சால் தெரியும்படி விவசாயி நிற்கும் போட்டோ எடுத்து, அதனுடன் சிட்டா, ஆதார், பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை கொடுத்து, ஒரு ஏக்கருக்கு, ரூ.500 உழவு மானியம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.