உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர்கள் பிரசாரம் நிறைவு; வாக்குறுதி மழை ஜோரு... வாக்காளர் மனசில் யாரு?

தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர்கள் பிரசாரம் நிறைவு; வாக்குறுதி மழை ஜோரு... வாக்காளர் மனசில் யாரு?

'அன்பான வாக்காளப் பெருமக்களே...'திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளர்களின் பிரசார முழக்கம் நேற்று மாலை நிறைவடைந்தது. நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது வெயில். ஆனால், வேட்பாளர்களுக்கோ, கட்சியினருக்கோ வெயில் சுட்டெரிக்கவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புத்தான் தென்பட்டது. வாக்குறுதிகளை மழையென பொழிந்தனர் வேட்பாளர்கள்; தங்களை ஈர்த்த வேட்பாளருக்கு நாளை ஓட்டளிக்க வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.பா.ஜ., மூலம் எழுச்சிசொல்கிறார் முருகானந்தம்திருப்பூர் காந்திநகரில் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் டூவீலர் ஊர்வலத்தில் பங்கேற்று பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களிடம் ஓட்டு சேகரித்தார். புதிய பஸ் ஸ்டாண்டில் ஊர்வலத்தை முடித்தார். பின், அங்கிருந்து பெருந்துறைக்கு கிளம்பி சென்று பிரசாரம் மேற்கொண்டார். முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடை பயணமாக சென்றார். மாலை, 6:00 மணியளவில் பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார்.வேட்பாளர் முருகானந்தம் பேசியதாவது:இன்றைக்கு ஆயிரக்கணக்கான நபர் ஒன்றிணைந்து நடை பயணமாக சென்று ஓட்டு கேட்கும் நல்ல சூழல் அமைந்துள்ளது. அப்போது, ஒரு புறம் கம்யூ.,களின் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. மறுபுறம் நம் இளைஞர்கள், இளம் தலைவர்களின் படைகள் ஊர்வலம் வந்தது. அவர்கள்(கம்யூனிஸ்ட்கள்) நடக்க முடியாமல் டூவீலரில் செல்கின்றனர். நாம் நடந்து ஊர்வலமாக சென்று மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். யார் நடக்கணுமோ, அவர்கள் நடக்காமல் டூவீலர்களில் போகிறார்கள். நமக்கு அத்தனை உரிமையும் இருக்கிறது. ஆனாலும், இந்த மண்ணை மிதித்து, இந்த மண்ணுக்கான உரிமைக்காக நடைபயணமாக சென்று ஓட்டு கேட்ட அற்புதமான நிகழ்வு அரங்கேறியது. கடந்த, இரு வாரங்களாக பிரசாரத்துக்கு சென்றிருந்த இடத்தில், மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.பிரச்னைகளுக்கு தீர்வுசுப்பராயன் உறுதிநேற்று திருப்பூர் வடக்கு மற்றும் தொகுதிகளில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் திறந்த வேனில் சென்று ஓட்டு சேகரித்தார்.பாண்டியன் நகரில் துவங்கிய பிரசாரம் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக, ராயபுரம் பகுதியில் நிறைவு பெற்றது. சுப்பராயன் பேசியதாவது:ஜவுளி தொழில் பெரும் நசிவைச் சந்தித்து வந்தது. இதற்கு காரணம் கட்டுப்பாடற்ற பஞ்சு ஏற்றுமதி. இதனை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தேன். ஆனால் மத்திய அரசு ெசவி சாய்க்கவில்லை. அதே போல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்தும் பேசினேன்.மக்கள் படும் துன்பங்களை மத்திய அரசு பொருட்டாகவே மதிக்கவில்லை. மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமையும் போது, அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளும் தீர்க்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார். மேயர் தினேஷ்குமார், காங்., மாநகர தலைவர் கிருஷ்ணன், மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்புஅருணாச்சலம் வேண்டுகோள்திருப்பூர் பி.என்., ரோடு சாந்தி தியேட்டர் அருகே, நுாற்றுக்கும் அதிகமான 'டூ வீலர்'களில் வந்த கட்சியினருடன் அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம் பேரணியைத் துவக்கினார். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் முக்கிய ரோடுகள் வழியாக சென்ற பேரணி, காங்கயம் கிராஸ் ரோடு சி.டி.சி., கார்னர் பகுதியில் நிறைவடைந்தது.வேட்பாளர் அருணாச்சலம் பேசுகையில், ''திருப்பூர் மக்களுக்கு 2வது குடிநீர் திட்டம் தந்தவர் எம்.ஜி.ஆர்., - 3வது குடிநீர் திட்டம் கொடுத்தவர் ஜெ., - 4வது குடிநீர் திட்டம் கொடுத்தவர் இ.பி.எஸ்.,- மக்களின் தாகம் தணிக்கும் குடிநீர் திட்டங்களை வழங்கிய அ.தி.மு.க.வை ஆதரியுங்கள். இக்கட்டான நிலையில், 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கி பனியன் தொழிலை பாதுகாத்த அ.தி.மு.க., வை ஆதரியுங்கள். 'பவர் டெக்ஸ்' திட்டம் மூலம், மின்கட்டண உயர்வு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், பனியன் தொழிலாளருக்கு வீட்டுவசதி கிடைக்கவும், ஆறு சட்டசபை தொகுதி மக்கள் வளர்ச்சிக்காகவும், அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்தன், கருப்பண்ணன், எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனுடன், பிரசார வேனில் சென்றார்.தொழில் காப்பேன்என்கிறார் சீதாலட்சுமிதிருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதியில், இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, புஷ்பா தியேட்டர் பகுதியில் நிறைவு செய்தார். பேண்டு வாத்தியம், டூவீலர் ஊர்வலம் என, பெரிய கட்சிகளுக்கு நிகராக கூட்டம் சேர்த்தனர். திருநங்கையர் உள்ளிட்ட பொது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.''நான் வெற்றி பெற்றால், பெருந்துறை 'சிப்காட்' தொழிற்சாலையை, பசுமை தொழிற்பேட்டையாக மாற்றுவேன்; பருத்தி உற்பத்தியை பெருக்கி, பனியன் தொழில் காக்க முயற்சி மேற்கொள்வேன். உழைக்கும் விவசாயிகளுக்கு பென்ஷன் பெற்றுக் கொடுப்பேன். திருப்பூரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்'' என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.-பெருந்துறை கடைவீதி பகுதியில் தொண்டர்கள் புடைசூழ நடைபயணமாக பிரசாரத்தை நிறைவு செய்த பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம்.திருப்பூரில் டூவீலரில் தொண்டர்கள் பின்தொடர, ஓட்டுக்கேட்டு வந்த இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன்.திருப்பூர், புஷ்பா ஸ்டாப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, பிரசாரத்தை நிறைவு செய்தார்.அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம் கைகூப்பியவாறு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வலம் வந்து வாக்கு சேகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ