பின்னலாடை நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையம்
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், அதிக எண்ணிக்கையிலான பெண் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். குடும்பத்தில், கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் சூழல், திருப்பூரில் அதிகம். குடும்பத்தின் நலனுக்காக, இருவரும் பணிக்கு சென்று வருவாய் ஈட்டுகின்றனர்.குழந்தைக்கு ஒரு வயது ஆனதும், தாய்மார்களும் பணிக்கு வருகின்றனர். குடும்ப சூழல் காரணமாக பணிக்கு வந்தாலும், குழந்தைகள் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகிறது. இதற்காக, முன்னணி பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், 'கிரீச்' என்ற குழந்தைகள் பகல் நேர பாதுகாப்பு மையத்தை, நிறுவன வளாகத்தில் செயல்படுத்தி வருகின்றன.பெண் தொழிலாளர், தங்கள் குழந்தைகளையும், நிறுவனத்துக்கு அழைத்து வரலாம். மையத்தில் உள்ள, காப்பாளர் பொறுப்பில் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு, பணியை கவனிக்கின்றனர். இடைவேளை மற்றும் உணவு இடைவேளையின் போது, குழந்தைகளை கவனித்துக்கொள்கின்றனர்.காப்பகங்களில், குழந்தைகளுக்கான பால் மற்றும் சிற்றுண்டியை, நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கிறது. குழந்தைகள் விளையாட தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது; பொழுதுபோக்கிற்காக, 'டிவி' வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை அருகிலேயே வைத்துக்கொண்டு, நிம்மதியாக பணியாற்றும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கவலையின்றி பணிபுரியலாம்
பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களில், 'கிரீச்' என்ற குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. அதற்கான முழு செலவையும், நிறுவனமே ஏற்றுள்ளது. உணவு, பொழுதுபோக்கு, விளையாட்டு வசதிகள் செய்யப்படுகிறது. பெண் தொழிலாளர் எவ்வித கவலையும் இல்லாமல், நிம்மதியாக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், இத்தகைய மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.- திருக்குமரன், பொதுச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.