பனியன் தொழிலாளர் சம்பள நிர்ணயம் அரசாணைக்கு சி.ஐ.டி.யு., கடும் எதிர்ப்பு
திருப்பூர்:பனியன் தொழிலாளர் சம்பள நிர்ணய அரசாணை, அப்பட்டமாக தொழிலாளர் விரோதமானது என, சி.ஐ.டி.யு., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், குறைந்தபட்ச சம்பள சட்ட விதிகளின்படி, தொழிலாளர் சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. 2016ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், புதிய சம்பளம் நிர்ணயம் செய்ய, குழு அமைக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அக்குழு கலைக்கப்பட்டு, புதிய குழு அமைக்கப்பட்டது.தொழிற்சங்கங்கள், பனியன் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தின.இதில், கடந்த 18ம் தேதி, குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்காமல், தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள சம்பளம், அப்பட்டமாக தொழிலாளர் விரோதமானது என, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க செயலர் சம்பத் கூறியதாவது:ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்கு பின், சம்பள நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. திருப்பூரின் நடைமுறை சம்பளத்தை காட்டிலும், குறைவாக சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது கவலை அளிக்கிறது. தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கு, மாத சம்பளமாக, 26,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டிருந்தோம். சம்பள நிர்ணய குழுவை கூட்டி ஆலோசிக்காமல், தன்னிச்சையாக சம்பள உயர்வு செய்துள்ளனர்.குறிப்பாக, பனியன் தொழிலில் ஈடுபடும், ஐந்து பிரிவு தொழிலாளர்களுக்கு, நுாறு நாள் திட்டத்தை காட்டிலும் குறைவாக சம்பளம் நிர்ணயம் செய்துள்ளனர். மீண்டும் சம்பள நிர்ணய குழுவை கூட்டி, எங்களது பரிந்துரைகளை பெற்று, நியாயமான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.