திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 90 நாட்களுக்குப்பிறகு நேற்று மீண்டும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிகள் திறப்பு, நீண்ட நாள் இடைவெளி காரணமாக, நேற்று மனு அளிப்பதற்கு பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டது.கடந்த மார்ச் 16ல், தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, மார்ச் 11ம் தேதியுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்றுவரும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நிறுத்தப்பட்டது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதையடுத்து, 90 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று முதல் மீண்டும், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வி தலைமையில் துவங்கியது. 10:20 மணிக்கு, டி.ஆர்.ஓ., ஜெய்பீம் வந்தார். பெரும்பாலான அரசு அலுவலர்கள், காலை 11:00 மணிக்குப்பின்னரே, கூட்ட அரங்கிற்கு வந்து சேர்ந்தனர். கூட்டம் துவங்கி ஒன்றரை மணி நேரம் வரை, அரங்கில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தன. வருகைப்பதிவேடும், 11:00 மணிக்குப்பின்னரே வைக்கப்பட்டது. இது, காலதாமத அதிகாரிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.தாமதமாக வந்த அலுவலர்களுக்கு சேரவேண்டிய புகார் மனுக்களை, 'தோழமை' அலுவலர்கள் பெற்றுவைத்துக்கொண்டனர்; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்தபின், அவர்களிடம் மனுக்களை வழங்கினர்.மூன்று மாதங்களாக முகாம் நடைபெறாதது, கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், நேற்றைய குறைகேட்பு கூட்டத்துக்கு, பொதுமக்கள் வருகையும் குறைந்தது. வழக்கமாக பொதுமக்கள் சார்பில் 400 முதல் 500 மனுக்கள் அளிக்கப்படும்; நேற்றைய முகாமில், வெறும் 280 மனுக்கள் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தன.90 நாட்கள் இடைவெளிக்குப்பிறகு நேற்று நடத்தப்பட்ட குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் இறுதியில் வந்து பங்கேற்றார்.---கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்திற்கு, அதிகாரிகள் பலர் வராததால் இருக்கைகள் காலியாக கிடந்தன.
மாற்றுத்திறனாளிகள் வேதனை
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் லோகநாதன், மகாதேவன், மெய்யழகன் ஆகியோர் அளித்த மனு:சக்கர நாற்காலி, கண் கண்ணாடி, ஊன்றுகோல், பேட்டரி வீல் சேர் உள்பட பல்வேறுவகை உபகரணங்கள் கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் பெற்றுத்தருவதில் காலதாமதத்தை தவிர்க்கவேண்டும்.தனியார் அலுவலகம், பேக்கரி, சலுான் கடைகளில், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்றுவர ஏதுவாக, சாய்தளம் அமைக்க அறிவுறுத்தவேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், முறையாக முகாம் நடத்தப்படுவதில்லை. உடனடியாக, கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடத்தவேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.