| ADDED : ஜூன் 13, 2024 11:58 PM
அவிநாசி : ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. குப்பை அள்ளும் துாய்மை பணிகள், தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. அறுபதுக்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்தை முறையான தேதிகளில் வழங்காமல் 15ம் தேதிக்கு மேல் வழங்குவதாகவும், கடந்த இரண்டு மாதமாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் துாய்மைப்பணியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், துாய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து நகராட்சி ஆணையரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மா.கம்யூ., நகர்மன்ற கவுன்சிலர் சுப்பிரமணியம், ஒன்றிய குழு உறுப் பினர் பாலசுப்ரமணியம், நகராட்சி தலைவர் குமார் (தி.மு.க.,), கவுன்சிலர் பாரதி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் துாய்மைப் பணியாளர் களின் கோரிக்கையை நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர்.''பணியாளர் வங்கிக் கணக்கிற்கு அவர்களது ஊதியம் வந்துவிடும்'' என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். துாய்மைப்பணியாளர்கள் கூறுகையில், ''ஒவ்வொரு மாதமும் இ.எஸ்.ஐ., - பி.எப்., போன்றவற்றை சம்பளத்தில் பிடித்துக்கொள்கின்றனர். ஆனால், பி.எப்., பணத்தை முறையாகச் செலுத்துவதில்லை'' என்றனர்.''ஒப்பந்ததாரருடன் பேசித் தீர்வு காணப்படும்'' என்று நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.