| ADDED : ஜூலை 16, 2024 02:15 AM
உடுமலை'விதை நெல் நாற்றுப்பண்ணைகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், கடத்துார் வட்டார விவசாயிகள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.மடத்துக்குளம் தாலுகா கடத்துார் சுற்றுப்பகுதியில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. அமராவதி ஆற்றுப்பாசனத்தில், பல ஆயிரம் ஏக்கரில், இப்பகுதியில் நெல் சாகுபடி செய்கின்றனர்.தற்போது, 1,580 ஏக்கர் நெல் நடவுக்காக, நாற்றுப்பண்ணை அமைத்துள்ளனர். இந்நிலையில், இரவு நேரங்களில், விளைநிலங்களில் புகும் காட்டுப்பன்றிகள் கூட்டம், விதை நெல் பண்ணைகளை சேதப்படுத்தி வருகிறது.பண்ணையிலுள்ள நாற்றுகளை முழுமையாக அவை சேதப்படுத்தி விடுவதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: நடவு பணிகளுக்காக தயாராகி வந்த, நாற்றுகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விட்டன.வனத்திலிருந்து வெகுதொலைவு தள்ளி அமைந்துள்ள கடத்துார் பகுதியில், காட்டுப்பன்றிகள் முகாமிட்டு விளைநிலங்களில் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதனால், பல ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது. தற்போது நாற்றுப்பண்ணை பாதித்துள்ளதால், புதிதாக நாற்று விட வேண்டியுள்ளது. இதனால், நடவு பணிகள் மேலும் தாமதமாகும்; செலவும் அதிகரிக்கும்.பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, வனத்துறையினர் நிவாரணம் வழங்க வேண்டும்; காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.இந்நிலையில், பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் விளைநிலங்களில் ஆய்வு செய்து நிவாரணத்துக்காக, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.