பொருத்தியது நுாறு; பராமரிப்பது யாரு? நகரில் செயல்படாத கண்காணிப்பு கேமரா குற்றத்தடுப்பில் ஏற்படுகிறது பின்னடைவு
உடுமலை;உடுமலை நகர பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட 100 கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருகிறது.உடுமலை நகரப்பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில், நகரின் பாதுகாப்பை கருதி நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நகராட்சி சார்பில் நகராட்சி எல்லை பகுதிகள் முதல் அனைத்து பகுதிகளிலும் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.உடுமலை பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு, தாரபுரம் ரோடு, திருப்பூர் ரோடு என அனைத்து பிரதான ரோடுகள், நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், ரோடு சந்திப்புகள் என நகரின் அனைத்து பகுதிகளிலும், 40 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், கேபிள் வாயிலாக இணைக்கப்பட்டு, உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்ட, கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு, கண்காணிக்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது.கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒரு சில மாதங்கள் மட்டும் இயங்கின. தொடர்ந்து கேமராக்கள் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அறை இணைப்பு ஆகியவை பராமரிக்கப்படாமல், கடந்த சில மாதமாக கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் வீணாக உள்ளது.இதனால், நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நகராட்சி நிதி செலவழித்து, போலீஸ் வசம் திட்டம் ஒப்படைக்கப்பட்டும், பராமரிப்பதற்கான நிதி இல்லை என போலீசார் கண்டு கொள்ளவில்லை.இதனால், பல லட்சம் ரூபாய் செலவழித்து அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு இல்லாமல், வீணாகி வருவதோடு, நகரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.குற்றச்சம்பவங்கள் நடந்தாலும், குற்றவாளிகளை அடையாளம் காண முடியாததோடு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் கண்காணிக்கும் திட்டமும் வீணாகியுள்ளது.எனவே, நகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களையும் பராமரித்து, கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சித்தலைவர் மத்தீன் கூறுகையில், 'நகராட்சி சார்பில் கேமராக்கள் அமைத்து, போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாருக்கு பராமரிக்க நிதி இல்லாததால், வீணாகியுள்ளது. இதனையடுத்து, நகராட்சி வாயிலாக தொடர்ந்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.' என்றார்.