சுய உதவிக்குழுவினருக்கு தொழிற்பயிற்சி அரசு உதவ எதிர்பார்ப்பு
உடுமலை;மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு, மானியத்தில், இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை, குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது. இப்பகுதிகளில்சில ஆண்டுகளுக்கு முன், தென்னை நார் சார்ந்த பொருட்களை தயாரிப்பதில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளித்து தொழில் துவங்க முயற்சி எடுக்கப்பட்டது.மத்திய அரசின் கயிறு வாரியத்தின் வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி வழங்க தமிழக அரசு மற்றும் வாரியத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், வாரியம் சார்பில்,குடிமங்கலம், உடுமலை ஆகிய பகுதிகளிலும் மையங்கள் திறக்கப்பட்டது.மையங்களில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சியில் மஞ்சியை கொண்டு கயிறு திரித்தல் மற்றும் மிதியடி தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட்டது.கயிறு திரிக்கும் பயிற்சி பெறும், உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரம் மானியமாக வழங்கப்பட்டது.இயந்திரத்தின் விலையில், 75 சதவீதம் கயிறு வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்கி வந்தது.கயிறு திரிக்கும் இயந்திரங்கள் முழு மானியத்தில் கிடைத்ததால், மகளிர் ஆர்வமாக பயிற்சியில் பங்கேற்று இயந்திரங்களை கொண்டு தொழில் நடத்தி வந்தனர்.பின்னர், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது உட்பட காரணங்களால், பயிற்சியில் சிக்கல் ஏற்பட்டது.மேலும் இயந்திரங்கள் வாங்க கயிறு வாரியம் நிதி ஒதுக்கினாலும், மாநில அரசு நிதி ஒதுக்க காலதாமதம் செய்ததால் திட்ட பணிகளில், தொய்வு ஏற்பட்டது.பராமரிப்பில்லாத கட்டடங்களை பயிற்சி மையமாக ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட காரணங்களால், பயிற்சி வழங்கும் திட்டம் முடங்கியது.பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினரும், தொழில் துவங்க ஆர்வம் காட்டவில்லை.இத்திட்டத்தை மறு சீரமைத்து, மானியத்தில், இயந்திரங்கள் பெற்றவர்கள் அதை பயன்படுத்தி கயிறு திரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, சிறுதொழில் பிரிவிற்கான சான்று வழங்கி, மின் இணைப்பு வழங்க வேண்டும்.மேலும், ஆர்வமுள்ள பெண்களை தென்னை நார் சார்ந்த தொழில்களில், ஈடுபட செய்வதால், கிராமப்புறங்களில், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.