| ADDED : ஜூலை 10, 2024 12:15 AM
பல்லடம்;திறந்த வெளியில் மதுக்கூடம் செயல்பட்டு வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க என பல்லடத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் நகராட்சி,பச்சாபாளையம் பகுதியில் 200 வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 'குடி'மகன்கள் சிலர் திறந்த வெளியில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.அப்பகுதியினர் கூறியதாவது:தேசிய நெடுஞ்சாலையுடன், பச்சாபாளையம் செல்ல இணைப்பு சாலை உள்ளது. தினமும் இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் பலர் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களுடன் வரும் குடிமகன்கள், வழித்தடத்திலேயே அமர்ந்து மது அருந்துவதால், இந்த வழியை பயன்படுத்தவே பயமாக உள்ளது.மேலும், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை இங்கேயே வீசி செல்வதால், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. போலீசாரிடம் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே, திறந்த வெளியில் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.