உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீருடை தைக்க உயராத சம்பளம் தையல் கலைஞர்கள் ஆதங்கம்

சீருடை தைக்க உயராத சம்பளம் தையல் கலைஞர்கள் ஆதங்கம்

பல்லடம்;''பள்ளிச்சீருடைகள் தைக்க பத்தாண்டாக சம்பளம் உயர்த்தப்படவில்லை'' என்று தையல் கலைஞர்கள் ஆதங்கப்படுகின்றனர்.தமிழ்நாடு கூட்டுறவு தொழில் சங்க திருப்பூர் மாவட்ட அலுவலகம், பல்லடம், படேல் வீதியில் உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண் தையல் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, 620 அரசு பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் இங்கு தைக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் தையல் கலைஞர்கள் சிலர் கூறியதாவது: கடந்த காலங்களில், 18 டிசைன்களில் மட்டுமே சீருடைகள் தைக்கப்பட்டு வந்தன. தற்போது, 240க்கும் மேற்பட்ட டிசைன்களில், கூடுதல் தையல்களுடன் சீருடைகள் தைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தாமல், கூடுதல் டிசைன்களில் தைக்குமாறு கூறுவது எப்படி நியாயமாகும்? தினமும், 18 மணி நேரம் வேலை செய்தால்தான், வாரத்துக்கு சராசரியாக, 300 சீருடை தைக்க முடியும். மின் கட்டணம், கட்டடம் மற்றும் வண்டி வாடகை என அனைத்தும் உயர்ந்து விட்டது. இதில், குறைந்த கூலியுடன் எப்படி தைக்க முடியும்? சம்பளம் கட்டுப்படியாகாது என்று கூறினால், மகளிர் சுய உதவி குழு மூலம் தைத்துக் கொள்வோம் என்று மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவியிடம் கேட்டதற்கு, ''அரசு அறிவுறுத்தல்படி கூலி வழங்கப்பட்டு வருகிறது. தையல் கலைஞர்களின் கோரிக்கைகள் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை