| ADDED : மே 24, 2024 12:15 AM
பல்லடம்:நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம், பல்லடம் அருகே, சாமளாபுரத்தில் நடந்தது.அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞான சம்பந்தம் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் பொன்னுசாமி, ராமச்சந்திரன், பழனிசாமி, அருணாச்சலம் மற்றும் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோவை முதல் கரூர் வரை உள்ள நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை, மருத்துவமனை, சாய ஆலை மற்றும் சாக்கடை கழிவுகள் சட்டவிரோதமாக கலக்கப்படுவதால் நொய்யல் ஆறு கடுமையாக மாசடைந்து வருகிறது. நொய்யல் ஆற்றுப்படுகையில் உள்ள விவசாய நிலங்கள், கால்நடைகள் மாசுபட்ட தண்ணீரால் கடுமையான பாதிப்பினை சந்திக்கின்றன.கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நொய்யல் ஆற்றை மீட்கும் நடவடிக்கைக்கு செலவிட வேண்டும். சர்பாசி சட்டத்தால் பல விவசாயிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதுகாக்க விளை பொருட்களுக்கு விலை கிடைக்க சாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். தென்னை விவசாயம் வாழ்வாதாரம் காக்க ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிப்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.