திருப்பூர் : திருமுருகன்பூண்டி நகராட்சி, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டியின் மக்கள் தொகை, 30 ஆயிரத்தை தொட்டது; கடந்த, இரு ஆண்டுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையூட்டியது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை.இதற்கிடையே திருப்பூர் மாநகராட்சியின் அந்தஸ்தை உயர்த்தும் நோக்கில், அதன் எல்லையை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பெருமாநல்லுார் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்படலாம் என உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பூண்டியும் இணைக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.பூண்டி நகராட்சி மக்கள் கூறியதாவது:பூண்டியில் போதிய குடிநீர் வினியோகம் இல்லாததால், தனி வீடுகளுக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழாய் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை. வீதி, தெருக்களுக்கு இடையே கழிவுநீர், மழைநீர் வடிகால் கட்டமைப்பும் சரியான நிலையில் இல்லை. இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட, அடுத்த ஓராண்டிலேயே, முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தியடையவில்லை; இதுவரை மெகா திட்டங்களை நிறைவேற்ற, பெரியளவிலான நிதி ஒதுக்கீடும் இல்லை.பூண்டியின் அந்தஸ்து மட்டும் உயர்கிறது; ஆனால், மக்களின் தேவைகள் பூர்த்தியாவதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக பேச்சு எழுந்துள்ளது. அவ்வாறு இணைப்பதால் மட்டும் நகராட்சி மக்களின் தேவைகள் பூர்த்தியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மக்கள் கருத்து கேட்கப்படும்
திருமுருகன்பூண்டி நகராட்சியில் குடிநீர், சாலை, வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பூண்டி நகராட்சியை, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைப்பது அரசின் கொள்கை முடிவு. மக்களின் கருத்துகளை கேட்டு தான், அரசு முடிவெடுக்கும்.- குமார், நகராட்சித் தலைவர், திருமுருகன்பூண்டி.
பழங்கரையும் இணைப்பு?
அவிநாசி ஒன்றியத்தின் பெரிய ஊராட்சியான பழங்கரையை, திருமுருகன்பூண்டியுடன் இணைக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், அப்பகுதி மக்கள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டது.'நகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாத பூண்டியுடன் பழங்கரையை இணைக்கக்கூடாது. ஏராளமானோர் விவசாயக்கூலி வேலை செய்து வருகின்றனர். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அந்த திட்டத்தை இழக்க நேரிடும்' என பழங்கரை பகுதிவாசிகள் தெரிவித்தனர்.கடந்த 2022 மே., 1ம் தேதி நடந்த கிராம சபையில், அவிநாசியின் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வசதியாக, பழங்கரை ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. '11 குக்கிராமங்களை உள்ளடக்கியும், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை உள்ளடக்கிய பழங்கரை ஊராட்சியை, பேரூராட்சியாக மாற்ற பரிந்துரை செய்ய வேண்டும்'' என்ற கோரிக்கை மனுவை, எம்.பி., ராஜாவிடம் கடந்தாண்டு ஜன., மாதம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.இந்த தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பழங்கரை ஊராட்சியை, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.