| ADDED : ஜூலை 19, 2024 11:09 PM
திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.இந்த மையம், 'நமக்கு நாமே' திட்டத்தில், 90 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன கருவிகளுடன் அமைகிறது. இதற்காக திருப்பூர் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை பெயரில் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், கட்டுமானப் பணியை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். உதவி கமிஷனர் வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதுதவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு செய்யும் பணி நடக்கிறது. இத்திட்டத்தில் ராயபுரம் தீபம் பாலம் அருகே, நொய்யல் கரையில் கான்கிரீட் சாய்வு தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியையும், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.