உடுமலை;பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்தில், இரண்டாம் சுற்றுக்கு, இன்று நீர் திறக்கப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், அரை சுற்று குறைக்கப்படும் வாய்ப்புள்ளது.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கோவை மாவட்டத்திலுள்ள, பல்லடம், சூலுார் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம், திருப்பூர் தாலுகாவிலுள்ள, 94 ஆயிரத்து, 521 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், முதல் மண்டல பாசனம், கடந்த, பிப்., 12ல் துவங்கியது.வரும், மே 22 வரை, 100 நாட்களுக்கு, உரிய இடைவெளி விட்டு, இரண்டரை சுற்றுக்களில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து, முதல் மண்டல பாசன நிலங்களுக்கு முதல் சுற்று நீர் வழங்கப்பட்டு, கடந்த, 12ம் தேதி நிறைவு செய்யப்பட்டது.பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்பட்டு, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி துவங்கியது.திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 55.12 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,725.61 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 770 கன அடி, பாலாறு வழியாக ஒரு கனஅடி என, 771 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, குடிநீர், 21 கனஅடி நீர், இழப்பு, 14 கனஅடி நீர் என, 35 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.இதனையடுத்து, முதல் மண்டலம், இரண்டாம் சுற்றுக்கு இன்று அதிகாலை முதல் நீர் திறக்கப்படுகிறது. 25 நாட்கள் வரை நீர் வழங்கப்பட்டு, நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த பாசனம் எப்போது?
முதல் மண்டல பாசனத்திற்கு, அணை நீர்இருப்பு மற்றும் குளிர் கால மழை, கோடை மழையை எதிர்பார்த்து, சுற்றுக்கு, 2 ஆயிரம் கனஅடி வீதம், இரண்டு சுற்றும், அரை சுற்றுக்கு, ஆயிரம் கனஅடி நீர் என, 5 ஆயிரம் கனஅடி நீர், இரண்டரை சுற்றுக்களில் வழங்க திட்டமிடப்பட்டது.ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. தற்போது, திட்ட தொகுப்பு அணைகளில், மொத்தம், 3,847.86 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது.தற்போதைய நிலையில், இரண்டாம் சுற்று மட்டுமே வழங்க முடியும். மழை பெய்தால் மட்டுமே, அரை சுற்று வழங்க முடியும்.பாசனம் நிறைவு செய்தால், உடனடியாக காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகளில் கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணிகள் துவங்கும். அடுத்த பாசனம் துவங்க, 4 மாதம் வரை ஆகலாம்.அதனால், பாசனத்திற்கு நீர் வழங்கும் வரை, காண்டூர் கால்வாய் வழியாக நீர் எடுக்கப்பட்டு, திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்படும். 800 கனஅடி நீர் குடிநீர் மற்றும் அணையிலுள்ள உயிரினங்களுக்காக இருப்பு வைக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.