மேலும் செய்திகள்
பிளஸ் 1 பொதுத்தேர்வு; தமிழ் இலக்கணம் கடினம்!
06-Mar-2025
திருப்பூர் ; பிளஸ் 2 ஆங்கிலத்தேர்வு நேற்று நடந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு, 3ம் தேதி துவங்கியது. நேற்று ஆங்கிலத்தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 25,863 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 25,604 பேர் தேர்வெழுதினர்; 259 பேர் ஆப்சென்ட். 184 தனித்தேர்வர்களில், 159 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.ஆங்கில தேர்வு குறித்து, மாணவர்கள் கூறியதாவது:சவுமிகா ஸ்ரீ: ஒரு மதிப்பெண் வினாக்களில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள், புதியதாக, கேட்கப்பட்டிருந்தது. பிரிவு 'ஏ' வில் இடம் பெற்ற ஒரு மதிப்பெண்களை முழுமையாக எழுதி முடிக்க நேரம் பிடித்தது. இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. 80 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெற முடியும்.கவிநயா: ஒரு மதிப்பெண் வினாக்களில் நான்கு வினாக்கள் பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது. நான்குக்கும் யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்ததால், ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெறுவது கஷ்டம். மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு விரைவாக விடையளிக்க முடிந்தது. 70 சதவீத மதிப்பெண்கள் பெற முடியும்.அனிஷ்: ஒரு மதிப்பெண் வினா சற்று கடினமாக இருந்ததால், இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களும் முதலில் விடையளித்தேன். ஏழு வினாக்களில், ஐந்துக்கு வினாக்களுக்கு விடையெழுதும் ஐந்து மதிப்பெண் வினா பகுதியில், 47வது வினா கடினமாக இருந்தது. இந்த கேள்வியை தவிர்த்து, சாய்ஸ் கேள்விக்கு தான் பலர் விடைஎழுதி இருக்க முடியும்.ஸ்ரீ மோகன்: ஆங்கில வினாத்தாள் யோசித்து எழுதும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண்ணில் முழுமையாக அள்ளலாம் என நம்பி வந்தேன். பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டதால் தடுமாற வேண்டியிருந்தது. முந்தைய ஆண்டு வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்கள் மீண்டும் கேட்கவில்லை. தேர்ச்சி பெற முடியும்; சென்டம் பெறுவது சற்று கடினம் தான்.
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சுரேஷ்குமார் கூறுகையில்,'சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் இடம் பெற்றிருந்தது. 46 பி 'எரர் ஸ்டாப்' கேள்விக்கு மாணவர்கள் சற்று தடுமாறியிருப்பர். இருப்பினும், புத்தகத்தை முழுமையாக, நன்றாக படித்து, பல முறை பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறப்பாக எழுதியிருக்க முடியும். ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் பாதிக்காது. அதே நேரம், ஒரு மதிப்பெண் வினாவில் நான்கு, ஐந்து மதிப்பெண்ணில் '46பி' பகுதியில் இடம் பெற்ற கேள்விகளால், நுாற்றுக்கு சென்டம் எண்ணிக்கை சற்று குறைய வாய்ப்புள்ளது,' என்றார்.
06-Mar-2025