கால்வாயை காப்பாற்ற கம்பி வேலி நிதி ஒதுக்காததால் சிக்கல்
உடுமலை, ; பாசன கால்வாய் குப்பை கொட்டும் பகுதியாக மாறுவதை தடுக்க, பொதுப்பணித்துறை சார்பில் கம்பி வேலி அமைக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வாயிலாக நான்கு மண்டலங்களிலும், 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது மூன்றாம் மண்டல பாசனத்தில், இந்த கால்வாயில், 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பு பாசன வசதி பெற்று வருகிறது.இந்த கால்வாயில், போடிபட்டி, பள்ளபாளையம், அரசு கலைக்கல்லுாரி பின்பகுதி, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம் என வழியோரத்தில், அனைத்து வகையான குப்பையும் கொட்டப்படுகிறது.குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால், கால்வாயே காணாமல் போகும் அவல நிலையில் உள்ளது.இத்தகைய கழிவுகள் பாசன நீர் திறக்கும் போது, அடித்துச்சென்று, விளைநிலத்தில் தேங்குவதுடன், மண் வளத்தையும் பாதித்து வருகிறது. பகிர்மான கால்வாய் ஷட்டர்களில், கழிவுகள் தேங்கி, தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன், பொதுப்பணித்துறை சார்பில், அவசர கதியில், இந்த வாய்க்காலில் உள்ள குப்பை அகற்றப்படுகின்றன. நீர் நிர்வாகம் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தரப்பில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை சார்பில், வாய்க்காலில், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க, குறிப்பிட்ட இடங்களில், கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.ஆனால், இதுவரை அரசு நிதி ஒதுக்கவில்லை. பாசன திட்டத்தை பாதுகாக்க, உடனடியாக அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கரையும் போச்சு!
நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாதால், உடுமலை கால்வாயின் கரை பல இடங்களில் சேதமடைந்து, நீர் விரயம் ஏற்பட்டு வருகிறது. மண்டல பாசனம் துவங்கும் முன், அடிப்படை பராமரிப்பு பணிகள் கூட மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், ஆயக்கட்டு விவசாயிகள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.