| ADDED : ஜூன் 06, 2024 11:29 PM
உடுமலை:ஊராட்சிகளுக்கான 'ஆன்லைன்' வரி வசூல் இணையதளத்தில் பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 12,846 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வாயிலாக, பொதுமக்கள் வீடு மற்றும் குடிநீர்வரி செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டு, தற்போது நடைமுறையிலும் உள்ளது.ஆனால், நிதியாண்டு 2024-25 துவங்கியதும் புதிதாக வரிசெலுத்துவதற்கு பெயர் மாற்றம் செய்வதற்கான அனுமதி இணையதளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களாக இந்த தடை இருப்பதால், புதிதாக வீடு மற்றும் மனை வாங்கியிருப்பவர்கள் வரிசெலுத்துவதற்கான பதிவு மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறியதாவது: வரி செலுத்துவோரின் விபரங்களில், பலரது மொபைல்போன் எண்கள் தவறாக உள்ளது. மேலும் பலரது மொபைல்போன் எண்கள் மாறி உள்ளது. இதனால் அவர்கள் வரிசெலுத்தியதற்கான குறுந்தகவல் அனுப்புவதில் சிக்கல் நிலவுகிறது.மேலும், கடந்த நிதியாண்டு வரை வரி நிலுவையில் வைத்திருப்பவர்கள் விபரங்களை புதுப்பிக்க வேண்டியுள்ளது. இதனால், தற்காலிகமாக பெயர் மாற்ற வசதிக்கான அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. மொபைல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டவுடன், மீண்டும் விரைவில் அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு, கூறினர்.