| ADDED : மே 03, 2024 11:18 PM
உடுமலை:''நாள்தோறும் அரைமணி நேரமாவது புத்தகம் வாசிப்பதிலும், நாளிதழ் வாசிப்பதையும் வழக்கமாக மாற்றுங்கள்,'' என, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி பேசினார்.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான 49வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்து, கல்லுாரி வளர்ச்சி அறிக்கையை வாசித்தார்.கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி பேசியதாவது:நம்மை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நாம் தான் காரணம். முதலில் சுய அன்பு இருக்க வேண்டும்.நீங்கள் செய்யும் செயல்களின் மீது, அன்பு செலுத்தினால் மட்டுமே சுற்றி இருக்கும் மற்றவைகளை நேசிக்க முடியும். பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்து, இன்று பட்டம் பெறும் வரை கொண்டு சேர்த்திருக்கும், உங்கள் பெற்றோருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை, வாழ்வு முழுவதும் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முதல் கடமையாக புத்தக வாசிப்பு இருக்க வேண்டும்.நாள்தோறும் அரைமணி நேரமாவது புத்தகம் வாசிப்பதிலும், நாளிதழ் வாசிப்பதையும் வழக்கமாக மாற்றுங்கள்.புத்தக வாசிப்பு ஒருவருக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். பல்வேறு அனுபவங்களை வழங்கும்.பல மனிதர்களின் சிந்தனைகளையும் ஒன்றிணைத்து, சிறந்த அறிவாற்றலையும் உங்களுக்கு வழங்கும்.எப்போதும் ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி விடாமுயற்சியாகவும் கடின உழைப்புடனும் பயணம் செய்யுங்கள். ஒருநாள் அந்த இலக்கை கட்டாயம் அடைய முடியும்.வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு, மற்றவர்களிடமிருந்து நாம் வித்தியாசப்பட்டிருக்க வேண்டும்.மற்றவர்களால் வீழ்த்த முடியாத நிலைக்கு, நாம் முன்னேறுவதை உறுதியாக கொண்டிருக்க வேண்டும். உங்களால் முடியும் என முதலில் நம்பி, உழைப்பை செலுத்தினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.இவ்வாறு பேசினார்.தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கப்பட்டன. இளநிலை மற்றும் முதுநிலை என மொத்தமாக, 793 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.