பள்ளிக்கு ஒதுக்கிய நிதி வீணாகுது!
உடுமலையில், ஆசிரியர் நண்பர் ஒருவரை சந்தித்த போது, 'பள்ளிக்கு வந்த அரசு நிதி வீணாகுதுங்க' என்றார். என்ன பிரச்னைனு கேட்டபோது, தொடர்ந்து கூறினார்.பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு நடத்தறதுக்கு, இணையவசதி ஏற்படுத்தும் பணிகள் விறுவிறுப்பா நடக்குதுங்க. ஆனா, இன்னும், 50 சதவீத பள்ளிகளில் இணைய வசதி பெறவில்லீங்க. இணைய வசதி உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்படவில்ல. ஆனா, இணைய பயன்பாட்டுக்கான கட்டணம், அதுக்கான தொகையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கு. இந்த நிதியில், இணைய கட்டணமாக மட்டுமே செலுத்த வேண்டுமென கல்வித்துறை உத்தரவு போட்டிருக்கு.இதனால, இணையவசதி இல்லாத பள்ளிகளில், இந்த நிதிய, பள்ளி பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல், வங்கி கணக்குகளில் வைத்திருக்கும் நிலையே உள்ளது. எந்த பயனும் இல்லாம, கடந்த நான்கு மாதங்களாக அரசாங்கமும் நிதி ஒதுக்குது. வேறு எதுக்கும் பயன்படுத்த முடியாம வீணாகுது, என்றார். பள்ளி கல்வித்துறை நிலம் 'ஸ்வாகா'
வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருவர் சுவாரஸ்யமாக நாட்டு நடப்பையும், ஆளுங்கட்சியினர் செயலையும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை, நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்து, பயணியர் நிழற்கூரை கட்டியிருக்கு. அதனையொட்டி சிலர் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து கடைகளும் வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல.இப்ப, வால்பாறை நகர தி.மு.க., பிரமுகர் ஒருத்தர், பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடந்த ஒரு மாதமாக கோழிக்கடை நடத்துகிறார். தட்டி கேட்க வேண்டிய கல்வித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இப்படியே போச்சுனா, கொஞ்ச நாள் கழிச்சு, பள்ளிக்கூடமே காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்றனர்.வெளியூர் சென்றிருந்த கணேசன் வந்ததும், அவரை அழைத்துக்கொண்டு நானும் அங்கிருந்து கிளம்பினேன். சந்தை வசூல் பணம் யாருக்கு போகுது!
வெசால கிழமைன்னா நால்ரோட்டை தாண்டி போக முடியாதுனு விவசாயிகள் புலம்பியபடி கொங்கல்நகரம் ஆலமரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.அவர்கள் பேசுகையில், 'வாராவாரம் வெசால கிழமையில நம்மூருல சந்தை நடத்துறாங்க. மெயின்ரோட்டை ஒட்டி வரிசையா கடை போடுறாங்க. இதனால, வண்டி விலகி போக முடியல. அப்பப்ப ஏக்ஸிடெண்டும் நடக்குது.இத்தன பிரச்னை இருந்தும், குடிமங்கலம் யூனியன் ஆபீஸ்காரங்க, பஞ்சாயத்து நிர்வாகத்த கண்டுகறது இல்லை. சரி ஏலம் விட்டு கவர்மென்ட்டுக்கு காசு போகுதான்னு பார்த்தா அதுவும் இல்லை.கடைக்காரங்ககிட்ட எல்லாம், யாரோ வசூல் பண்ணிட்டு போயிறாங்களாம். கவர்மென்ட் இடத்துல கடைபோட்டு, யார்யாரோ வசூல் பண்றாங்க. இந்த பணமெல்லாம் யாருக்கு போகுதுனு தெரியல. இதையெல்லாம் எந்த அதிகாரியும் கண்டுக்கறதும் இல்ல.ஏதாவது பெரிய அசாம்பவிதம் நடந்தா மட்டும்தான் அவங்க வருவாங்க. இப்படியே போச்சுனா, காலியிடம் இருந்தா கடைபோட்டு காசு பார்க்க எல்லாரும் கிளம்பிருவாங்க. சரி உள்ளூரு பொல்லாப்பு நமக்கு எதுக்கு, நாம கிளம்புவோம்னு சொல்லிட்டு நடைய கட்டினர். நாமும் அங்கிருந்து நகர்ந்தோம். ஓடைப்புறம்போக்குல கிராவல் திருட்டு
உடுமலை தாலுகா ஆபீஸ்ல, விவசாயகள் நிறைய பேரு வந்திருந்தாங்க. வண்டல் மண் எடுக்க நிறைய கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியிருக்காங்க. ஆனா, ஓடை புறம்போக்குல கிராவல் மண் திருடறதுக்கு கட்டுப்பாடே இல்லைனு, பேசிக்கிட்டு இருந்தாங்க.கொஞ்சம் விபரமா சொல்லுங்கனு கேட்டேன். குறிச்சிக்கோட்டை, ராமேகவுண்டன் புதுார் மலையடிவாரப்பகுதியில், ஆனைமலை புலிகள் காப்பக வன எல்லையில், அரசுக்கு சொந்தமான ஓடைப்புறம்போக்கு இருக்கு.இங்கு, சட்ட விரோதமாக இரவு நேரத்துல கிராவல் மண் வெட்டி எடுத்து, 30க்கும் மேற்பட்ட லாரிகளில் கடத்துறாங்க. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, ஆளும்கட்சி பிரமுகர் இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்காரு.வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலையில், விவசாயிகள் புகார் தெரிவித்தாலும், 'மாமூல்' காரணமாக, வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுக்கறதே இல்லை.குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கற நிலையில், அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரிகள், அரசு நிலத்தில் கிராவல் மண் திருட்டு குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பது பல சந்தேகங்கள கிளப்புது, என்றார். நண்பர் உதயகுமார் வந்ததும், நானும் அங்கிருந்து கிளம்பினேன். முதல்வர் நிவாரண உதவி கிடைக்கல!
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட்டில் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அவரிடம் பேசும்போது, கிணத்துக்கடவுல நடக்குற விபத்து குறித்து தெரிவித்தார்.விபத்துல இறந்தவங்க குடும்பத்துக்கு, முதல்வர் நிவாரண உதவி கிடைக்குமுனு பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அவர், கடந்த 2023 செப்டம்பர் மாசம் கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் பிரிவுல ஒரு விபத்து நடந்துச்சு, அதுல ஒருவர் இறந்து விட்டார். இத பத்தி போலீஸ் விசாரிச்சாங்க, ஆனா இப்போ வரைக்கும் விபத்து ஏற்படுத்தின வாகனத்தை போலீசார் கண்டுபிடிக்கல.அது மட்டுமின்றி, விபத்துல இறந்தவரின் குடும்பத்துக்கு, இன்னும் முதல்வர் நிவாரண உதவித்தொகை கிடைக்கல. அந்த குடும்பத்தார், போலீஸ் ஸ்டேஷனுக்கும், தாசில்தார் ஆபீசுக்கும் நடையா நடந்துட்டு இருக்காங்க. எதை எதிர்பார்த்து, நிவாரண உதவி வழங்காம இருக்காங்கனு தெரியல. ஏழ்மையில், ஆதரவில்லாதவர்களை அதிகாரிகள் அலைய விடுறாங்க, என, வேதனையோடு தெரிவித்தார். விளையாட்டு விஷயத்துல 'விளையாட்டு'
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நடைபாதையில், உடற்கல்வி ஆசிரியரா இருக்கற நண்பரை சந்தித்தேன். விளையாட்டை ஊக்குவிக்க கொண்டு வந்த திட்டத்தை வச்சு, விளையாடுறாங்க, என, பொடி வைத்து பேசினார். என்ன, விஷயம்னு விசாரித்தேன்.திறமையான பல விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்' துவங்கியிருக்காங்க. இதில், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான, 33 விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கறாங்க.இதுக்காக வாங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரும். அந்த விளையாட்டு உபகரணங்களை வி.ஏ.ஓ., வாங்கி வச்சிருக்கணும். அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர், ஊராட்சி தலைவரை ஒன்றிணைத்து, கிராமப்புற இளைஞர்களிடம் உபகரணங்களை வழங்கி விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்னு அரசு உத்தரவிட்டிருக்கு.ஆனா, வருவாய் துறையில பிஸியாக இருக்கும் வி.ஏ.ஓ.,க்கள் விளையாட்டு செயல்பாட்டில் எப்படி கவனம் செலுத்துவாங்க. இது சாத்தியமே இல்லைனு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பறாங்க. இதில் ஊழல் நடக்கவும் வாய்ப்பிருக்குனு ஆதங்கப்பட்டாரு.
நாங்க... போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரல!
'நாபிட்' கொள்முதல் செய்த கொப்பரைக்கு இன்னும் பணம் வழங்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், சப் - கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பள்ளியில் குழந்தைகளுக்கு 'பீஸ்' கட்ட முடியாம சிரமப்படுகிறோம். விவசாயிகளின் நிலையை எடுத்துச் சொல்லி தீர்வு காணுங்க என வலியுறுத்தினாங்க.அங்கு வந்த பொள்ளாச்சி தாசில்தார், 'பத்திரிகைகாரங்க போட்டோ எடுத்துட்டாங்க... இனியாவது எழுந்து இருங்க,' என கூறினார். இதை கேட்ட விவசாயிகள் பொங்கி எழுந்து, 'நாங்க போட்டோவுக்கு போஸ் கொடுக்கறதுக்காக இங்க உட்காரலைங்க. எங்களது வாழ்வாதாரம் பிரச்னைக்காக வந்து இருக்கோம். நாபிட் பணம் கொடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்,' என கோரஸாக சொன்னாங்க.முக்கிய பொறுப்பில் இருக்கும் தாசில்தாரே, பொறுப்பின்றி பேசறாருனு இதை கண்டிக்கறோம்னு குரல் கொடுத்தாங்க.நிலைமையை உணர்ந்த அதிகாரிகள், 'விவசாயிகளை சமாதானப்படுத்தி சப்-கலெக்டரை சந்திக்க வச்சு, பேச்சு நடத்தினாங்க. பணம் வாங்கி தருவதாக சப்-கலெக்டரும் உறுதி கொடுத்து அனுப்பினார்.