உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் : அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி, துாய்மை பணியாளர், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சண்முகசுந்தரம் தலைமைவகித்தார். கவுரவ தலைவர் கந்தசாமி வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் மோகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் ஆபரேட்டர்கள், கம்ப்யூட்டர் பணியாளர், துாய்மை பணியாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலக நடைபாதை பகுதியில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) நாகராஜ், பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். குறைந்தபட்ச சம்பள உயர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, காலை முதல் மதியம் வரை தொடர்ந்த காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சேகர், நன்றி கூறினார்.---நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சிகளில் பணிபுரியும் குடிநீர் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் பணியாளர், துாய்மைப்பணியாளர் உள்ளிட்டோர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் என்ன?

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2017 ல் அரசாணை வெளியிடப்பட்டது. மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு, மாதம் 14,503 ரூபாய்; துாய்மை பணியாளர்களுக்கு 12,503; துாய்மை காவலர்கள், பள்ளி சுகாதார பணியாளர், மகளிர் திட்ட தொழிலாளர்களுக்கு 12,503; கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு 15,503 ரூபாய் வழங்கப்படவேண்டும்.அனைத்து திட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கும், இளநிலை உதவியாளருக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும். துாய்மை பாரத இயக்கம், சமூக தணிக்கை, மகளிர் திட்டத்தில் பணிபுரியும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், காலமுறை ஊதியமின்றி பணிபுரியும் உதவி திட்ட இயக்குனர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் உதவி திட்ட அலுவலர்களுக்கு நிகராக 84,150 ரூபாய் சம்பளம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ