உடுமலை;கிராமங்களில், விதிமுறைகளை அமல்படுத்தப்படாமல், சுகாதாரமற்ற முறையில், இறைச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது; மக்கள் பாதித்தும், சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களில், கடைகள் அமைக்க, ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்படுகிறது. ஆனால், இறைச்சிக்கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.நெடுஞ்சாலைத்துறை மற்றும் புறம்போக்கு நிலங்களில், ரோட்டோரத்தில், திறந்தவெளியில் இக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.நகரப்பகுதியில், ஆடு வதை கூடம் அமைக்கப்பட்டு, இறைச்சி விற்பனைக்கு தனியிடம் ஒதுக்கீடு செய்வதுடன் விற்பனையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், கிராமங்களில் திறந்தவெளியில் ஆடுகளை வெட்டி, இறைச்சியை அப்படியே தொங்க விடுகின்றனர்.இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மீன் மற்றும் சிக்கன் கடைகளும் இவ்வாறே கிராமங்களில் உள்ளன.இது குறித்து, மக்கள் புகார் தெரிவித்தாலும், ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை; சுகாதாரத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.இரு ஒன்றியங்களிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இத்தகைய அவலம் தொடர்கதையாக உள்ளது.விற்பனையாளர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தி, விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.