திருப்பூர் : போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் வேகம் காட்டும் போக்குவரத்து போலீசார், சாலை விபத்துக்கு வித்திடும் செயற்கைத்தனமான செயல்களை சரி செய்வதில், ஆர்வம் காட்டாமல் இருப்பது, வாகன ஓட்டிகளை அதிருப்தியடை செய்திருக்கிறது.திருப்பூரின் பிரதான சாலைகளில், வாகன நெரிசல் என்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்து தடுக்க போக்குவரத்து போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிக்னல், செக்போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் வாகன கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார், ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், அதிவேக பயணம் மேற்கொள்வோர், சிக்னல் விளக்கை கவனிக்காமலோ, மெத்தனபோக்காக கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர்.'சில நேரங்களில் சாலை விதி தொடர்பாக அதிக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்' என்ற உயரதிகாரிகளின் நெருக்கடியால், சாலையில் செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு, இ-சலான் வாயிலாக அபராதம் விதித்து, வாகன ஓட்டிகளின் மொபைல் எண்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்; 'எங்கு, என்ன விதிமீறலில் ஈடுபட்டோம்' என தெரியாமலேயே வாகன ஓட்டிகள், 'ஆன்லைன்' வாயிலாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கிறது.பயணம் தடுமாற்றம்அதே நேரம், வாகன ஓட்டிகள் மீது மட்டும் கவனம் செலுத்தும் போலீசார், வாகனங்கள் பயணிக்க இடையூறாக உள்ள செயல்களை கண்டுகொள்வதே இல்லை. உதாரணமாக, திருப்பூர் - அவிநாசி ரோட்டில், குமார் நகர், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ரோட்டோரம் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, சரிவர மூடப்படாததால் புழுதி பறக்கிறது; இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடியே பயணிக்க வேண்டியிருக்கிறது.இச்சாலையில் பயணிக்கும் தனியார், அரசு பஸ்கள் சாலையின் நடுவிலேயே நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால், பின் தொடர்ந்து வரும் வாகனங்கள், ஸ்தம்பித்து நிற்க வேண்டியுள்ளது. 'சாலையோரம் நிறைந்து கிடக்கும் ஆக்கிரமிப்புகளால், பஸ்களை ஓரங்கட்டி நிறுத்த முடிவதில்லை' என்கின்றனர் பஸ் ஓட்டுனர்கள்.இச்சாலையின் ஆங்காங்கே ரோட்டில் உள்ள சிறு, சிறு குழிகளால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் திணற வேண்டியிருக்கிறது. மேலும், அனுப்பர்பாளையம், பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் 'ஒன் வே'யில் ஏராளமான டூவீலர் ஓட்டிகள் 'ஒன் வே'யில் வருகின்றனர். அதுவும், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், 'ஒன் வே'யில் வருவதால், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் திணற வேண்டியிருக்கிறது. இந்த சாலை மட்டுமின்றி காங்கயம், தாராபுரம் சாலையில் கூட இத்தகைய விதிமீறல்களை காண முடியும்.
வேண்டாமே தட்டிக்கழிப்பு!'சாலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிற பிரச்னைகள், நெடுஞ்சாலை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்ந்த பிரச்னை; அவர்கள் தான் சரி செய்ய வேண்டும்' என, போலீசார் கூறுகின்றனர். ஆனால், மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடக்கும், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்கும் போக்குவரத்து போலீசார் இதுபோன்ற பிரச்னைகளை கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லும் பட்சத்தில், அதற்கான தீர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு; சாலை போக்குவரத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து போக்குவரத்து போலீசார் தான் தெளிவாக அறிந்திருப்பர் என்கின்றனர், வாகன ஓட்டிகள்.