உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தை ரோட்டில் தேங்கும் மழை நீர்

உழவர் சந்தை ரோட்டில் தேங்கும் மழை நீர்

உடுமலை;உடுமலை உழவர் சந்தை பகுதியில், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. மழை நீர் வடிகால் அமைக்க நகராாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை உழவர் சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார கிராமங்களிலிருந்து, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.தினமும், 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் வாங்க, உழவர் சந்தைக்கு வருகின்றனர்.உழவர் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள ரோடு பராமரிப்பு இல்லாமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், மழை நீர் வெளியேறும் கட்டமைப்பு மற்றும் உழவர் சந்தையிலிருந்து மழை நீர் வடிகால் அமைக்கப்படாததால், மழை நீர் உழவர் சந்தை வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.நீர் வெளியேற வழியின்றி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், காய்கறிகள் ரோட்டில் வைத்து விற்க முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையும் உள்ளது.உழவர் சந்தை முன், மழை நீர், கழிவு நீர் குளம் போல் தேங்கி, சேறும், சகதியுமாக மாறி வருவதால், கொசு உற்பத்தி, துர்நாற்றம் என சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே, உழவர் சந்தை வளாகத்திலுள்ள ரோடுகளை புதுப்பிக்கவும், மழை நீர் வடிகால் வசதி செய்ய வேண்டும். அதே போல், உழவர் சந்தை ரோட்டில் எளிதாக மழை நீர் வெளியேறும் வகையில், மழை நீர் வடிகால் அமைக்க நகராாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை