உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொசு ஒழிப்பு பணியை உடனே துவக்குங்க! உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

கொசு ஒழிப்பு பணியை உடனே துவக்குங்க! உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

உடுமலை;மழைக்கு பிறகு, டெங்கு நோய் தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், வடிகால்களிலும் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.இந்நிலையில், பொது சுகாதாரத்துறையால், டெங்கு பாதிப்பு பரவ வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலில், திருப்பூரும் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், இம்மாதத்தில் இதுவரை, 11 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகி, குணமடைந்துள்ளனர். தற்போதைக்கு ஒருவர் மட்டும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டெங்கு பாதித்து, சிகிச்சையில் உள்ளார்.திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளி கூறியதாவது:மாவட்டத்தில் இன்னமும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கவில்லை. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வீடுகளின் அருகில் டயர், ஆட்டுக்கல், உரல், பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி, லார்வா, கொசுஉற்பத்தி ஆகாத வகையில் துாய்மையாக பராமரிக்க வேண்டும்.தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொண்டாலே, டெங்கு காய்ச்சல் அச்சம் இல்லாமல் இருக்கலாம். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

இதையும் கவனியுங்க!

டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், உடுமலை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, அறிவுறுத்தும் நிலையில், திறந்த வெளிகள் மற்றும் ரோட்டில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள்வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ