'என் மகன், பிளஸ் 2 முடிச்சுட்டான்; அடுத்த என்ன படிக்க வைக்கிறது...' தீராத குழப்பத்தில் பெற்றோர். ''என்ன 'கட் ஆப்'க்கு, என்ன மாதிரி 'கோர்ஸ்' கிடைக்கும்...'' இப்படியான குழப்பத்துடன் மாணவர்கள். இதற்கெல்லாம் ஒரு தெளிவு கொடுத்து, குழப்பம் தீர்த்திருக்கிறது, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி.தெளிவு கிடைத்தது; பெற்றோர் திருப்திசுமதி, திருப்பூர்: வழிகாட்டி கண்காட்சி, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எந்த கல்லுாரியில், எதுமாதிரியான பாடப்பிரிவுகள் உள்ளன; என் பிள்ளைக்கு உகந்த பாடப்பிரிவு என்ன, அந்த பாடம் பயில்வதால் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பது போன்ற பல விஷயங்களை அறிந்துக் கொள்ள முடிந்தது. கட்டண விவரங்களையும் தெரிந்துக் கொள்ள முடிந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கருத்தரங்கில் பேசியவர்களின் கருத்துக்கள், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக இருந்தது.குமார், ஊத்துக்குளி: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, நுாறு சதவீதம் பயன் தரக்கூடியதாக இருந்தது. நாங்கள், திருப்பூர் நகரில் இருந்து, 33 கி.மீ., தொலைவில் உள்ள கிராமப்புறத்தில் இருந்து வருகிறோம். எங்களை போன்றவர்களுக்கு, நகர்ப்புறங்களில் ஒவ்வொரு கல்லுாரிக்கும் சென்று, அங்கு என்னென்ன பாடப்பிரிவுகள், கட்டணம் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்வது கடினம்; வழிகாட்டி மூலம், ஒரே கூரையின் கீழ் அதற்கான வாய்ப்பை பெற முடிந்தது; கல்லுாரி கல்வி தொடர்பாக நிறைய விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது.புருேஷாத்தமன், திருப்பூர்: இந்த வழிகாட்டி நிகழ்ச்சி, முழு திருப்தியளித்தது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதலும் கிடைத்தது. கல்லுாரி நிர்வாகத்தினர், தெளிவாக, பொறுமையாக விளக்கமளித்தனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இன்னும் அதிகளவில் கல்லுாரிகள், அரங்கு அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அனைத்துக் கல்லுாரிகளின் விவரங்களையும் சேகரித்துக் கொண்டேன்; ஒவ்வொரு கல்லுாரியை குறித்தும் அறிந்துகொள்ள இது உதவும்.-------குழப்பம் தீர்ந்தது; மாணவர்கள் மகிழ்ச்சிவிஸ்வநாதன், திருப்பூர்அரசுப்பள்ளியில், 12ம் வகுப்பு தேர்வெழுதியிருக்கிறேன். எந்த கல்லுாரியில் எவ்வளவு கட்டணம் என்பதை அறிந்துகொள்ள இந்த வழிகாட்டி நிகழ்ச்சி உதவியது. சி.பி.எஸ்.இ., கல்வி முறையில் பயின்றவர்களுக்கு மட்டும் தான் கல்லுாரி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது போன்ற சிலரின் தகவல்கள் தவறு என்பதையும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற தெளிவும் கிடைத்தது.நிஷாந்த், திருப்பூர்: பிளஸ் 2வில், எத்தனை 'கட் ஆப்'க்கு, எந்த 'கோர்ஸ்' கிடைக்கும் என்பதை, இந்த வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. எந்தெந்த கல்லுாரிகளில் 'கேம்பஸ் இன்டர்வியூ'வுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்; அதன் மூலம், வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. வழிகாட்டி நிகழ்ச்சி, நல்ல அனுபவம் தான். கருத்தரங்கில் பேசியவர்களின் கருத்துக்கள், தன்னம்பிக்கையை விதைத்தன.சஞ்சய், திருப்பூர்: எம்.எஸ்.சி., பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் நோக்கில், அரங்கில், கல்லுாரிகளை அலசினேன்; ஒரு 'ஐடியா' கிடைத்தது; கட்டண விவரம் உள்ளிட்டவற்றில் தெளிவு கிடைத்தது. அரங்கு அமைத்திருந்த கல்லுாரி நிர்வாகத்தினர், நான் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடப்பிரிவு தொடர்பான வழிகாட்டுதலை வழங்கினர்; பயனுள்ளதாக இருந்தது. கருத்தரங்கில் பேசிய பேச்சாளர்களின் அனுபவம், வாழ்க்கை மீதான புரிதலை ஏற்படுத்தியது.சந்தியா, திருப்பூர்: பி.காம்., சி.ஏ., படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். வழிகாட்டியில் அரங்கு அமைத்துள்ள அனைத்து கல்லுாரிகளிலும், அந்த பாடப்பிரிவு தொடர்பான கட்டணம், கல்லுாரி நிர்வாகத்தினர் ஏற்படுத்தும் 'கேம்பஸ் இன்டர்வியூ', வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தேன்; என் படிப்பு சார்ந்து சொந்தமாக தொழில் துவங்கி, தொழில் முனைவோராகும் வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்தையும் தெளிவுப்படுத்திக் கொண்டேன்.நந்தினி, பெருந்துறை: வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க, பெருந்துறையில் இருந்து வந்துள்ளேன். எம்.பி.பி.எஸ்., தான், எனது இலக்கு; 'நீட்' தேர்வு அவசியம் என்ற அடிப்படையில், அந்த பாடப்பிரிவு சார்ந்த கல்லுாரிகள், 'கட் ஆப்' மதிப்பெண் சார்ந்த மாணவர் சேர்க்கை, கட்டண விவரம் உள்ளிட்டவற்றை அறிந்துக் கொள்ளும் ஆவலில் வந்தேன். தகவல் கிடைத்தது; இருப்பினும், முழு திருப்தி கிடைக்கவில்லை.சசிகலாஸ்ரீ, திருப்பூர்: நான், 11ம் வகுப்பு தான் படிக்கிறேன். பிளஸ் 2 முடித்த பின், எந்த கல்லுாரியில், என்ன பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பதை அறிந்துக் கொள்ளும் ஆவலில், வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்தேன்; பயனுள்ளதாக இருந்தது. நல்லதொரு 'ஐடியா' கிடைத்தது. 11ம் வகுப்பிலேயே, உயர்கல்வி குறித்து திட்டமிடும் போது, 12ம் வகுப்பில், அதற்கேற்ப இலக்கு வைத்து படிக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.