| ADDED : ஜூன் 28, 2024 11:54 PM
உடுமலை;அரசுப்பள்ளிகளில் சீருடை வழங்குவதற்கு தாமதமாவதால், மாணவர்கள் பள்ளிக்கு வர சிரமப்படுகின்றனர்.அரசு பள்ளிகளில் துவக்கம் முதல் உயர்நிலை வரை, மாணவர்களுக்கு சீருடைகள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன. ஒரு கல்வியாண்டில், நான்கு செட்கள் வீதம் வழங்கப்படுகிறது.ஆனால் பெரும்பான்மையானவை தரமில்லாமல் இருப்பதால், விரைவில் கிழிந்து விடுகின்றன. வேறுவழியில்லாமல் மாணவர்கள் பலமுறை தையல் போட்டு சீருடை அணிந்து வருகின்றனர்.நடப்பு கல்வியாண்டு துவங்கி பத்து நாட்களுக்கும் மேலாகிறது. பாடப்புத்தகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சீருடைகள் இதுவரை வழங்கப்படவில்லை.இதனால் பள்ளிக்கு வருவதற்கு மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏழை எளிய மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கின்றனர். பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர்.தற்போது பஸ் பாஸ் இல்லாமல், சீருடையும் இல்லாதால் கட்டணம் வழங்கி டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்து துறையினர் அனுமதி வழங்குகின்றனர்.ஆனால் பல பகுதிகளில் மாணவர்கள் சீருடை இல்லாமல், பள்ளிக்கு வரும் போது டிக்கெட் எடுக்க வலியுறுத்துகின்றனர். நாள்தோறும் தொகை செலுத்த முடியாமல், மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.இன்னும் சில வீடுகளில், நாள்தோறும் வண்ண வண்ண ஆடைகளை அணிந்து விடுவதற்கு வழியில்லை என, குழந்தைகளின் பெற்றோர் வருத்தப்படுகின்றனர்.சில குழந்தைகளின் பெற்றோர், அவர்களின் சுயசெலவில் சீருடை தைத்து அணிந்துவிடுகின்றனர். பல மாணவர்களுக்கு அதற்கும் வழியில்லாததால், பள்ளிக்கு செல்ல மறுத்து அடம் பிடிப்பதாகவும் பெற்றோர் பள்ளிகளில் புகார் தெரிவிக்கின்றனர்.சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதுதான், இப்பிரச்னைகளின் முக்கிய காரணமாக உள்ளது. மாணவர்களுக்கு விரைவில் சீருடை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.