உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நங்கூரக் கயிறு அவிநாசி தேர் இழுக்கும் வடமாகிறது

நங்கூரக் கயிறு அவிநாசி தேர் இழுக்கும் வடமாகிறது

அவிநாசி : கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பயன்படும் நைலான் கயிறு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரை இழுக்கும் வடக்கயிறாக பயன்படுத்தப்பட உள்ளது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதற்காக பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றை தயார் செய்ய பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருந்த ஷெட் அகற்றப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.தேர் முழுவதுமாக தண்ணீர் பீய்ச்சியடித்து துாசிகள், மண் படலம் அகற்றப்பட்டது. தேர் சக்கரங்களுக்கு கிரீஸ் அடிக்கும் பணிகள்; தேர் முழுமைக்கும் கம்ப்ரஸர் மூலம் வார்னிஷ் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பக்தர்கள் தேரை இழுக்க நார் கொண்டு செய்யப்பட்ட வடக் கயிறு தருவிக்கப்பட்டு தேர் இழுக்கப்படும்.கடந்த ஆண்டு 300 அடி நீளம் நாரினால் செய்யப்பட்ட வடக்கயிறு கொண்டு பக்தர்கள் தேரை இழுத்தனர். இந்தாண்டு பக்தர்கள் தேரை இழுக்க முதன் முறையாக நைலான் கயிறு பயன்படுத்தப்படுகிறது.கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் கூறியதாவது:இதற்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்த நாரினால் செய்யப்பட்ட வடகயிறு தண்ணீரில் நனைந்தாலும் வெயிலில் காய்ந்து கிடந்தாலும் சீக்கிரமாக இற்றுப்போய் அறுந்து விடும். தற்போது வாங்கப்பட்டுள்ள நைலான் வடக் கயிறு குறைந்தபட்சம்3 முதல் 4 ஆண்டுகள் தேர் விழாவிற்கு பயன்படுத்த முடியும்.துறைமுகங்களில் உள்ள நங்கூரத்தில் இந்த வகை நைலான் கயிறு கொண்டு கப்பலை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தினர், இதைத் தயாரித்து விற்கின்றனர்.தமிழகத்தில் திருவாரூர், தஞ்சை மற்றும் கோவை மாவட்டம், பேரூர் தேர் ஆகியன இந்த வகை நைலான் கயிறு கொண்டு இழுக்கப்படுகிறது. தற்போது அவிநாசி பெரிய தேரை இழுப்பதற்கு ஆர்டர் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. 600 கிலோ எடையும், 300 அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது. இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்.இவ்வாறு, சீனிவாசன் கூறினார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை