திருப்பூர்;துணைத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான, பயிற்சி கையேடுகள், சென்னையிலிருந்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன.திருப்பூர் மாவட்டத்தில், 2023 - 24ம் கல்வியாண்டில், மாணவ, மாணவியர் 30 ஆயிரத்து 180 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில், 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 1,490 பேர்; மாணவியர் 811 பேர் என, மொத்தம் 2,301 பேர் தோல்வி அடைந்தனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள், வரும் ஜூலை 2ம் தேதி முதல் நடைபெற உள்ளன. அனைத்து மாணவர்களையும் துணைத்தேர்வு எழுதச்செய்து, தேர்ச்சி பெறச்செய்வதற்கான முயற்சியில் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அனைத்து அரசு பள்ளிகளிலும், துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடம் வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அம்மாணவர்கள், பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து, வெற்றிபெற ஏதுவாக, சிறிய அளவிலான வினா - விடை கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், கையேடு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் துணைத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடுகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு நேற்று வந்திறங்கின. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என அனைத்து பாட கையேடுகளும் வந்துள்ளன.பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 2ம் தேதி தேர்வு நாளுக்கு முன் வரை வகுப்புகள் நடத்தப்படும். தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள், எளிதாக புரிந்து படிக்க ஏதுவாக, சிறிய அளவிலான கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மாணவர்களுக்கு இந்த கையேடு வழங்கப்படும். இந்த கையேடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வினா - விடைகளை படிப்பதன்மூலம், துணைத்தேர்வு மாணவர்கள், வெற்றியை வசமாக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.