இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஐம்பதாயிரம் நாடா இல்லா தறிகள் மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இத்தொழில் வளர்ச்சி நோக்கி நடைபயில, மத்திய - மாநில அரசுகளிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.இதுதொடர்பாக, பல்வேறு கருத்துகளை, விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் சக்திவேல் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.n ஜவுளி உற்பத்தி தொழிலின் தற்போதைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?பஞ்சு, நுால் விலை ஏற்ற இறக்கங்கள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால், அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது. துணியின் விலையை நிர்ணயிக்க முடியாததால், ஆர்டர்கள் கைநழுவிப் போகின்றன. ஏற்றுமதியும் பாதிக்கப்படுகிறது. ஜவுளி உற்பத்தி தொழிலின் மூலப் பொருட்களான பஞ்சு - நுால் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். இவற்றின் விலையை சீராக்குவதுடன், உள்நாட்டில் பஞ்சு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், ஜவுளி உற்பத்தி தொழில் நலிவடைந்துள்ளது. கட்டமைப்பு உருவாக்க முதலீடுகள் தேவை
n தொழில் மேம்பாடு அடைய என்ன செய்யலாம்?பஞ்சு உற்பத்தியை உள்நாட்டில் அதிகப்படுத்துவதன் மூலம், தடையின்றி பஞ்சு, நுால் கிடைக்கும். காடா துணி உற்பத்தியை பெருக்க முடியும். மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் குஜராத், ராஜஸ்தான், ம.பி., உட்பட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்படுகின்றன.இந்த செயல்முறைகளை இங்கேயே மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் தேவை. இதற்கு தேவையான பிரின்டிங், சாயமிடல் ஆகியவற்றில், நவீன தொழில்நுட்பம் அமைக்க பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், முதலீடு செய்ய யாரும் தயாராக இல்லை. எனவே, மத்திய அரசு தேவையான மானியத்துடன் கூடிய கடன் வழங்கி, கட்டமைப்புகளை உருவாக்க உதவ வேண்டும்.இவ்வாறு மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்படும் துணிகளை, நேரடியாக இங்கேயே விற்பனை செய்வதால், கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இதற்காக, இப்பகுதியில் புதிய ஜவுளி சந்தைகள் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம், புதிய ஆர்டர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நுால் வங்கி திட்டம், சோலார் மின் உற்பத்தி ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருவதால், ஜவுளி தொழில் உற்பத்திக்கான செலவினங்கள் குறையும்.ஏற்கனவே வண்டி வாடகை, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்டவை உயர்ந்துள்ள நிலையில், டோல்கேட் கட்டணங்கள் கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, டோல்கேட் கட்டணங்களில் இருந்து ஜவுளி தொழில் துறைக்கு சலுகைகள் அளிக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் இணைந்து உதவிடுமா?
n ஜவுளித்தொழில் மேம்பட மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?இந்திய அளவில், தமிழகத்தில், 19 சதவீதம் மட்டுமே ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது. நெசவுத் தொழிலில் முதல் இடத்தில் இருந்தும், பிற மாநிலங்களை நம்பியே இங்கு உற்பத்தி நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஜவுளித் தொழில் துறையின் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த அளவு மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கவலையாக உள்ளது.ஜவுளித் தொழில் துறை சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் அதுகுறித்து தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். தறிகளை நவீனப்படுத்துவதற்கு உண்டான நிதி உதவி செய்ய வேண்டும். மத்திய - மாநில அரசுகள் இணைந்து இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் குறைந்த விலையில் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.