உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தண்ணீர் தேங்காத உப்பாறு தடுப்பணைகள் ஆய்வு செய்து நடவடிக்கை தேவை  

தண்ணீர் தேங்காத உப்பாறு தடுப்பணைகள் ஆய்வு செய்து நடவடிக்கை தேவை  

உடுமலை;உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து, முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கும், முக்கிய நீராதாரமாக உப்பாறு மழை நீர் ஓடை அமைந்துள்ளது.பருவமழைக்காலத்தில் மட்டும் இந்த ஓடைகளில் நீரோட்டம் இருக்கும். அங்குள்ள, 25க்கும் மேற்பட்ட சிறிய மழை நீர் ஓடைகள் சேர்ந்து, அந்த தண்ணீர் உப்பாறு அணையில் சேர்கிறது. அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் மழை நீர் ஓடைகள் முறையாக பராமரிக்கப்படாமல், உள்ளன. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் ஓடைகளின் நிலை குறித்து எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றிய விவசாயிகள் தொடர் கோரிக்கை அடிப்படையில், மழை நீரை சேகரிக்க ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்ட, அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், உப்பாறு ஓடையின் குறுக்கே, 25 இடங்களில், தடுப்பணை கட்ட, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. தடுப்பணை கட்டுமான பணிகள், ஒன்றிய நிர்வாகத்தின் கண்காணிப்பில், மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், பல இடங்களில், தடுப்பணை முறையாக கட்டப்படவில்லை; தண்ணீர் தேங்கும் வகையில், எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: உப்பாறு ஓடை, அனைத்து இடங்களில், புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், தடுப்பணைகளுக்கு நீர் வரத்து கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், கட்டுமான பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மழைக்காலத்தில், கிடைக்கும் தண்ணீரையும் தேக்கி வைக்க முடியாது.ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கட்டுமான பணிகளையும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள தடுப்பணைகள் நிலை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். முழு கொள்ளளவில், தடுப்பணைகளில், தண்ணீர் தேங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி