உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை; ரோட்டுக்கு வந்த தக்காளி

கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை; ரோட்டுக்கு வந்த தக்காளி

பல்லடம்; தக்காளி, கிலோ, 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள், தக்காளி பழங்களை ரோட்டில் வீசி செல்லும் அவலம் ஏற்பட்டு வருகிறது.விவசாய விளை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்போது விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது. இல்லத்தரசிகள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில், தக்காளி, வெங்காயம் ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன.உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்படும்போது, இவற்றின் விலை அதிகரிப்பதும், விளைச்சல் அதிகரிக்கும்போது, விலை சரிவடைவதும், ஆண்டுதோறும் நடந்து வருகிறது. விலை உயரும்போது பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.விலை குறையும்போது, உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வகையில், சமீப நாட்களாக, தக்காளி விலை படிப்படியாக சரிவடைந்து வருவது, விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.தக்காளி பயிரிட்ட விவசாயிகள் சிலர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், பரவலாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. சமீப நாட்களாக, தக்காளி விலை தொடர்ச்சியாக சரிவடைந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலிக்கும், வண்டி வாடகைக்கும் கூட கட்டுப்படியாத நிலை உள்ளது. 15 கிலோ கொண்ட தக்காளி டிப்பர் ஒன்று, 40 ரூபாய்க்கு கீழ் கேட்கின்றனர்.இல்லையெனில், வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். வேறு வழியில்லாமல் கேட்ட விலைக்கு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது,' என்றனர்.முன்னதாக, போதிய விலை கிடைக்காத்தால், இவற்றை, ஆள் கூலி, வண்டி வாடகை கொடுத்து, விற்பனைக்கு கொண்டு செல்வதை காட்டிலும், அப்படியே விட்டுவிடுவது மேல் என விவசாயிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக, விளை நிலங்களிலேயே, தக்காளிகளை கருக வைத்து அழிப்பதும், ரோட்டில் வீசி செல்வதுமான நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !