உடுமலை;மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு, மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணியர் , பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக திருமூர்த்திமலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.கனமழை காரணமாக, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும், மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீரென வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருமூர்த்திமலைப்பகுதிகளிலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி, கடந்த மூன்று நாட்களாக, பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவில் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையடிவாரத்தில், அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பஞ்சலிங்கம் அருவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோவில் அருகிலுள்ள தோணியாற்றில், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. கோவிலில், வழக்கம் போல் பூஜைகள் நடந்து வருகிறது. மழை மற்றும் மழை வெள்ளம் அதிகரிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது,' என்றனர்.