ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் துவக்குவது எப்போது? பொருத்தப்படாத தளவாட பொருட்கள்
உடுமலை : ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதற்கான தளவாடப்பொருட்கள் வழங்கப்பட்டு, பல நாட்களாக பொருத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பல்வேறு நலத்திட்ட பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகங்கள், நடப்பாண்டில் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, பள்ளிகளில் தொலைதொடர்பு இணைய சேவை பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகளில் முதற்கட்ட நிலையை கடக்க முடியாமல், இணைய சேவை பெறுவது பெரும் சவாலாக உள்ளது.உடுமலை வட்டாரத்தில், 50 சதவீத பள்ளிகளில் இணைய சேவை பெறப்பட்டுள்ளது. மேலும், இணை சேவை பெற்றிருந்தாலும், பெறாமல் இருக்கும் பள்ளிகள் என அனைத்துக்குமே அதற்கான கட்டணம் ஏப்., மாதம் முதல் கல்வித்துறையின் சார்பில் தொடர்ந்து வழங்கப்படுகிறது.இந்நிலையில், சில பள்ளிகளில் இணைய சேவை பெற்று, வகுப்பறைகள் தயாராகவும், அனைத்து தளவாட பொருட்கள் வந்த பின்னரும், இரண்டு மாதங்களுக்கு மேலாக ஸ்மார்ட் வகுப்பு துவங்குவதற்கு காத்திருக்கின்றனர்.இதனால் பள்ளி நிர்வாகத்தினர் மட்டுமில்லாமல், பெற்றோரும் அதிருப்தியுடன் உள்ளனர். உடுமலை வட்டாரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், விரைவில் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:ஸ்மார்ட் வகுப்பு துவங்குவதற்கான அனைத்து தளவாடப்பொருட்களும், பள்ளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் அவற்றை பொருத்துவதற்கு யாரும் வரவில்லை.பெற்றோர் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தில் தான் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கல்வியாண்டு நிறைவடைவதற்குள், ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்படுமா என அதிருப்தியுடன் கேட்கின்றனர்.அனைத்து பொருட்களும் பொருத்தப்படாமல் இருப்பதால், அவற்றை பாதுகாப்பதும் கூடுதல் பணியாக உள்ளது.இவ்வாறு கூறினர்.