யுடர்ன் எடுக்க மறுப்பது ஏன்? குமார் நகரில் வாகனம் தாறுமாறு
திருப்பூர் : திருப்பூர், குமார் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்தும் கூட, அன்றாடம் விதிமீறல் நடக்கிறது. இதனால், விபத்துஅபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர், வளையங்காட்டில் இருந்து குமார் நகர் நோக்கி வரும் வாகனங்கள் நேராக அவிநாசி ரோட்டை கடக்காமல் இடது புறமாக திரும்பி, கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில், 'யுடர்ன்' எடுத்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பணியில் இருக்கும் போலீசார் ரோட்டை கடக்க நிற்கும் வாகன ஓட்டிகளிடம் இடது புறமாக திரும்பி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு தெரிவதற்காக அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பெரும்பாலான வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபடும் வகையில் இடது புறமாக செல்லாமல், தாறுமாறாக தாண்டி வருகின்றனர். தற்போது, பணியில் இருக்கும் போலீசாரும், இதனை கண்டுகொள்வதில்லை. சில நேரங்களில் போலீசாரும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.இதனால், அவிநாசி ரோட்டில் இருந்து வளையங்காட்டுக்கு செல்ல கூடிய வாகனங்கள் வரும் போது, இங்கிருந்துசெல்பவர்கள் குறுக்கே சென்று விபத்து அபா யத்தை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.