உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனிம வளங்கள் கடத்தலை தடுப்பதில்... அலட்சியம் ஏன்?மாவட்ட நிர்வாகத்தின் மவுனத்தால் அதிருப்தி

கனிம வளங்கள் கடத்தலை தடுப்பதில்... அலட்சியம் ஏன்?மாவட்ட நிர்வாகத்தின் மவுனத்தால் அதிருப்தி

உடுமலை:உடுமலை பகுதியிலிருந்து, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவது குறித்து தொடர் புகார் எழுந்தும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மவுனம் சாதிப்பது அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது; எல்லையில், சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக, கிராவல் மண், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை விதிமுறைகளை மீறி அள்ளி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.முன்பு, கிராமங்களில் இருந்த குளங்கள், மழை நீர் ஓடைகளில் இருந்து அள்ளப்பட்ட மண், பின்னர், தனியார் விளைநிலங்களில் இருந்தும் நேரடியாக அள்ளப்பட்டு, விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கனிம வளத்துறையின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், விளைநிலங்களில், பல அடி ஆழத்துக்கு மண் அள்ளப்படுவதால், சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக, பாறை அடுக்குகள் வரை மண்ணை அள்ளி விடுவதால், மழைநீர் தேங்காமல், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதுடன், அருகிலுள்ள விளைநிலங்களிலும், விவசாயம் செய்ய முடிவதில்லை.மடத்துக்குளம் தாலுகா கிராமங்களில் இத்தகைய மண் திருட்டு அமோகமாக நடைபெற்று வருகிறது; உடுமலை தாலுகாவிலுள்ள மலையடிவார கிராமங்களிலும் இதே நிலை உள்ளது.விதிமுறைகளை மீறி அள்ளப்படும் கனிம வளங்கள், ஒன்பதாறு, சின்னாறு செக்போஸ்ட் வழியாக கேரளாவுக்கு அதிகளவு கடத்தப்படுவதாக, விவசாயிகள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர்.ஒரே பர்மிட்டை பயன்படுத்தி, அதிகளவு வாகனங்களில், கனிமவளங்களை எடுத்துச்செல்கின்றனர்.நெல், கரும்பு, காய்கறிகள் என அனைத்து விவசாய சாகுபடிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த விளைநிலங்கள் கனிம வளங்களை அதிகளவு சுரண்டியதால், படிப்படியாக தரிசாக மாறி வருகின்றன.இவ்வாறு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டும், அடுக்கடுக்காக புகார் தெரிவித்தும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னைக்கு போதிய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.கோட்ட, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவித்த புகார் மற்றும் மனுக்கள் மீதும் போதிய நடவடிக்கை இல்லை.

முற்றுகை போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், உடுமலை அருகே, கேரள எல்லை முற்றுகை போராட்டம் சமீபத்தில் நடந்தது.இதில், 'கேரளாவில் அமராவதி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில், தடுப்பணை கட்ட, மடத்துக்குளம், உடுமலை பகுதியில் இருந்தே அனைத்து கட்டுமான பொருட்களும் விதிகளை மீறி எடுத்துச்செல்லப்படுகிறது. இது குறித்து ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இணைப்பு ரோடுகள் வாயிலாக, ஒன்பதாறு செக்போஸ்ட் சென்று, அங்கிருந்து எவ்வித தடையும் இல்லாமல், கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது,' என விவசாயிகள் வேதனையோடு பேசினர்.இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வாக, கனிமவளத்துறை, வருவாய்த்துறை சார்பில், தமிழக - கேரள எல்லையில், சோதனைச்சாவடி அமைத்து நாள் முழுவதும் வாகன தணிக்கை செய்ய வேண்டும்.கேரளாவுக்கு செல்ல ஒரே வழித்தடம் மட்டுமே இருப்பதால், எளிதாக கடத்தல் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். பாரபட்சம் இல்லாமல், கனிம வள கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே, இரு தாலுகாவிலும், பல ஆயிரம் ஏக்கரில், விவசாயத்தை பாதுகாக்க முடியும்.அமராவதி ஆற்றில், மணல் கடத்தல் குறித்து கண்டுகொள்ளாததால், இன்று, அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து விட்டது; இனியும் அலட்சியம் காட்டினால், விளைநிலங்கள் தரிசாகி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும்விவசாயிகள், ஒருங்கிணைந்து தமிழக - கேரள எல்லையில், தொடர் போராட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை