உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உரிமைத்தொகைக்கு 10,897 விண்ணப்பங்கள்

உரிமைத்தொகைக்கு 10,897 விண்ணப்பங்கள்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், மகளிர் உரிமைத்தொகை கோரும், 10,897 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் கடந்த 15ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், நான்கு கட்டங்களாக மொத்தம் 325 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு ஆறு முகாம் வீதம் நடத்தப்பட்டு வருகிறது. நகர பகுதிகளில் 13 அரசுத்துறை சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறை சார்ந்த 46 சேவைகளும் அளிக்கப்படுகின்றன.அரசுத்துறை சேவைகளை ஒரே இடத்தில் பெறமுடிவதால், முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பட்டாமாறுதல், உட்பிரிவு, வீட்டு வரி, காலியிட வரி விதிப்பு, புதிய மின் இணைப்பு, புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உள்பட பல்வேறுவகை தேவைகளுக்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக, அனைத்து முகாம்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுவருகிறது. தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.

முகாம்களில்திரளும் பெண்கள்

முகாம்களில், இதர விண்ணப்பங்களைவிட, உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டமே அதிகரித்து காணப்படுகிறது. அதனால், ஒவ்வொரு முகாமிலும், உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் கவுன்டர் எண்ணிக்கை, 4ல் இருந்து, 10 ஆக உயர்த்தப்பட்டு, பதிவு வேகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கவுன்டர்களில், பெண்களிடமிருந்து, ரேஷன், ஆதார், வங்கி கணக்கு எண், வாகன விவரங்கள் உள்பட உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, மகளிர் உரிமைத்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.கடந்த 15 முதல் 18ம் தேதி வரை, திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில், மொத்தம் 6 வார்டுகள்; தாராபுரம் நகராட்சி, அவிநாசி, மூலனுார், ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், திருப்பூர் ஒன்றியங்கள், உடுமலை நகராட்சி பகுதிகளுக்கு என, மொத்தம் 24 முகாம்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு முகாமிலும், மகளிர் உரிமைத்தொகைக்கு, 2,500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நான்கு நாட்களில், 24 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், பெண்களிடமிருந்து மொத்தம் 10,897 மகளிர் உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.வரும் முகாம்களில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவுக்கு கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, முகாம்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை