உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தேர்தலில் ஓட்டளிக்கப்போகும் 15 ஆயிரம் மூத்த வாக்காளர்கள்

 தேர்தலில் ஓட்டளிக்கப்போகும் 15 ஆயிரம் மூத்த வாக்காளர்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிக்கான வரைவு பட்டியலில், வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் தகுதியுள்ள, 85 வயதை கடந்த, 15 ஆயிரம் மூத்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர திருத்தம் முடிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்.-ல், இறந்த, இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்த, 5.83 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 9 லட்சத்து 83 ஆண்; 9 லட்சத்து 70 ஆயிரத்து 817 பெண்; 244 திருநங்கை என, மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 பேர், வரைவு பட்டியலில் வாக்காளராக இடம்பெற்றுள்ளனர். வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் வசதியை தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தின் எட்டு தொகுதிகளிலும், வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் தகுதியுள்ள, 85 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் வரை, மாவட்டத்தில், 531 ஆண்; 468 பெண் என, நுாறு வயதை கடந்த 999 பேர், வாக்காளராக பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாதது, பிறந்த தேதியில் தவறு ஆகியவையே இதற்கு காரணம். எஸ்.ஐ.ஆர்.க்கு முன்னரே, நுாறு வயதை கடந்தோரின் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டு, சரி செய்யப்பட்டது. எஸ்.ஐ.ஆர்.ல், இறந்த வாக்காளர்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர். தீவிர திருத்தம் முடிவடைந்து தற்போது, சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. வயது மாறுபாடுகள் உள்ளோரிடமிருந்து, திருத்தம் செய்வதற்காக, படிவம் 8 பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது. அதனால், நுாறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்கின்றனர், தேர்தல் பிரிவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை