வந்தே மாதரம் 150வது ஆண்டு
காங்கயம்: காங்கயம் ஜெய்ரூபா கல்லுாரியில் நடந்த வந்தே மாதரம் 150வது ஆண்டு விழாவில், பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த படியூரில் ஜெய்ரூபா கல்வி நிறுவனத்தில் வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ஜ. திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளரும், கல்வி நிறுவனத்தின் தாளா ளருமான கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: நவ., 7ம் தேதியில், வந்தே மாதரம் தேச பக்திப் பாடலின் 150வது ஆண்டு விழாவை தமிழக மக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. நாம் அனைவரும் தேசபக்தியுடன் இருப்பதை போன்று, இப்பாடலுக்கான பெருமையைப் போற்றுவதும் நம் கடமை. அவ்வகையில் இப்பாடலின் 150 ஆண்டு விழாவை நாம் அனைவரும் பெருமிதத்துடனும், தேசப்பற்றுடனும் கொண்டாடி அதற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பா.ஜ., மாநில பொது செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் கோபால், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று, கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி வந்தே மாதரம் பாடலை பாடினர்.