மேலும் செய்திகள்
பசுமை பூமியை விட்டுச்செல்வோம்
26-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 16 ஆயிரம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சாலையின் நடுவில் உள்ள மையத் தடுப்பிலும், சீரான இடைவெளியில் மரக்கன்று நடும் பணியும் துவங்கியிருக்கிறது. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், மரக்கன்று வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், தங்கள் எல்லைக்குட்பட்ட சாலையோரங்கள் உட்பட வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மரக்கன்று நடப்பட உள்ளது. அவ்வகையில், திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம் உட் கோட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் கோட்டத்தின் சார்பில் மட்டும், 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. மரக்கன்று நடும் பணிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் கோட்ட பொறியாளர் ரத்தினசாமி கூறுகையில்,''திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைக்குட்பட்டு, 1,600 கி.மீ., துார ரோடு உள்ளது. சாலையோரங்களில் வேம்பு, புளிய மரம், அரச மரம், பூவரச மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட உள்ளன. ரோட்டோரம் உட்பட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும்,'' என்றார். மையத்தடுப்பிலும்... திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் சாலையோரங்களில் தான் மரங்கள் வளர்ந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்றுகளும் நடப்படுகின்றன. இதில், விரிவுபடுத்தப்பட்ட சாலையின் நடுவில் அமைக்கப்படும் மையத்தடுப்பிற்குள் மரக்கன்று நடப்படுகிறது. கஞ்சப்பள்ளி சாலையில் அத்தகைய பணிகள் நடந்து வருகின்றன. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவில் உள்ள மையத்தடுப்பில் மரக்கன்று நட்டு வளர்ப்பதன் வாயிலாக, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து, மரக்கன்றுகள் வளர்ந்து தழைக்கும் போது, சாலை முழுமைக்கும் அது, பசுமை போர்வையை விரிக்கும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
26-Oct-2025