மேலும் செய்திகள்
வெள்ள பாதிப்பு நிவாரணம் முதல்வர் ரேகா அறிவிப்பு
10-Sep-2025
திருப்பூர்; 'திருப்பூர் மாவட்டத்தில், 17 மாதத்தில் தெரு நாய்கள் கடித்து, 803 ஆடுகள், 566 கோழிகள் பலியாகியுள்ளன' என, மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், உள்ள கிராமங்களில், விவசாயத்துடன் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பும் உள்ளது. கடந்த இரு ஆண்டாக, விவசாய தோட்டங்களில் புகும் தெரு நாய்கள், பட்டிகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள மற்றும் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்டவற்றை கடிக்கின்றன; இதில், கால்நடைகள் பல பரிதாபமாக பலியாகின்றன. 'இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்' என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கை அடிப்படையில், 2024 அக். 24 முதல், 2025 மார்ச் 23 வரையிலான, 6 மாத காலத்தில் தெரு நாய்கள் கடித்து பலியான கால்நடைகளுக்கு, அரசின் சார்பில், 14.97 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இருப்பினும், இழப்பீடு வழங்கப்பட்ட தேதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கால கட்டங்களிலும், தெருநாய்கள் கடித்து பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதன் விளைவாக, மாவட்ட நிர்வாகம் எடுத்த கணக்கெடுப்பு படி, கடந்தாண்டு (2024) ஜன., முதல், அக்., வரையும், இந்தாண்டு (2025) மார்ச் 20ம் தேதி துவங்கி செப்., வரையிலான, 17 மாதத்தில், தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், தாராபுரம், காங்கயம், உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், மடத்துக்குளம், திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி வட்டாரங்களில், 615 செம்மறியாடுகள், 188 வெள்ளாடுகள், 566 கோழிகள் மற்றும், 15 எருமைகள் ஆகியவை, தெரு நாய்களால் கடிப்பட்டு இறந்துள்ளன. இவற்றுக்கு இழப்பீடாக, 54.93 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், தெரு நாய்களால் கடிபட்டு கால்நடைகள் பலியாவது தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உடனடியாக இழப்பீடு வழங்க ஏதுவாக, இருப்புத் தொகையாக, 10 லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
10-Sep-2025