உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயற்கை நுாலிழை ஜவுளிக்கு பிரகாசமான எதிர்காலம்!

செயற்கை நுாலிழை ஜவுளிக்கு பிரகாசமான எதிர்காலம்!

திருப்பூர்: ஜவுளி ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் செயற்கை நுாலிழை, துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும் கடந்த சில மாதங்களாக உயர்ந்துள்ளது.சர்வதேச நாடுகளில், இந்தியாவில் உற்பத்தியாகும் தரமான பருத்தி நுாலிழை ஆடைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், கோடை காலங்களில் மட்டும் இவ்வகை ஆடைகளை அணிகின்றனர். பெரும்பாலான மாதங்களில், மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நுாலிழை ஆடைகளையே விரும்புகின்றனர்.உலக அளவில், 70 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடை வர்த்தகமும், 30 சதவீதம் பருத்தி ஆடை வர்த்தகமும் நடந்து வருகிறது. இந்தியாவின் ஜவுளி உற்பத்தியும், வர்த்தகமும், பருத்தி நுாலிழையையே சார்ந்து இருந்தது. இதன்காரணமாக, சர்வதேச சந்தைகளில், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஈர்ப்பது சிரமமாக இருந்தது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும், மத்திய அரசு அதிகாரிகளும், பின்னலாடை தொழில்துறையினர், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், சர்வதேச அளவிலான இந்திய நிறுவனங்களின் போட்டித்திறன் மேம்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கொரோனாவுக்கு பின், இந்தியாவில் இருந்து செயற்கை நுாலிழை மற்றும் துணி ஏற்றுமதி குறைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த சில மாதங்களாக, இவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.செயற்கை நுாலிழை, இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கும் நுாலிழைகள், பாலிதீனில் இருந்து உற்பத்தியாகும் நுாலிழைகள், அவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் துணிகள், ஜவுளி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. துண்டு, மெத்தை விரிப்பு, பெட்ஷீட், கையுறை, காலுறை, சமையல் அறை ஜவுளி பொருட்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும் சூடுபிடித்துள்ளது.கடந்த 2023 அக்., மாதம், 3,230 கோடி ரூபாயாக இருந்த, செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியானது; கடந்த மாத (அக்.,) நிலவரப்படி, 3,680 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

மதிப்புக் கூட்டி ஏற்றுமதி

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறியதாவது:செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி, கடந்த மாதம் மட்டும், 13.97 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த, 2023 ஏப்., முதல் அக்., மாதம் வரை, 22 ஆயிரத்து, 487 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியானது.நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில், 23 ஆயிரத்து, 787 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில், செயற்கை நுாலிழையில் இருந்து ஆடை மட்டுமல்ல, வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும், செயற்கை நுாலிழை மற்றும் துணி ஏற்றுமதி செய்யாமல், மதிப்பு கூட்டப்பட்ட, ஆடைகள், ஜவுளி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களாக மாற்றி, ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று உறுதியேற்றுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை