உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனவிலங்கு சேதாரத்துக்கு நிவாரணம் நிர்ணயிக்க குழு அமைக்கணும்! சாகுபடி நஷ்டம் அதிகரித்தும் மாறாத வனத்துறை

வனவிலங்கு சேதாரத்துக்கு நிவாரணம் நிர்ணயிக்க குழு அமைக்கணும்! சாகுபடி நஷ்டம் அதிகரித்தும் மாறாத வனத்துறை

உடுமலை, மடத்துக் குளம் தாலுகாவில், கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகளால், விவசாய சாகுபடியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில், யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, மான்கள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள், மா, நிலக்கடலை, தென்னை, மொச்சை உள்ளிட்ட சாகுபடிகளில் ஏற்படும் சேதம் காரணமாக, விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.சமீபகாலமாக, வனத்திலிருந்து வெளியேறிய குரங்குகள் கூட்டம், தேங்காய் மற்றும் இளநீரை சேதப்படுத்துகின்றன.மேலும், வனத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள, குடிமங்கலம் வட்டாரத்திலும், மக்காச்சோளம், பீட்ரூட் மற்றும் இதர காய்கறி சாகுபடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன.அனைத்து பகுதிகளிலும், நடவு செய்யப்படும் தென்னங்கன்றுகளின் குருத்துகளை விலங்குகள் பிடுங்கி விடுவதால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.விளைநிலங்களில், வனவிலங்குகளால் சேதம் ஏற்படும் போது, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வரும் அத்துறையினர், நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துகின்றனர்.நிவாரணம் பெற, வி.ஏ.ஓ., சான்று பெற்று, அதை இணைத்து வனத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து பல மாதங்களுக்குப்பிறகு, வனத்துறையினர் நிவாரணம் வழங்குகின்றனர். அந்த நிவாரணத்தொகை, சேதத்தில் பாதியளவு கூட இல்லை என்பதே விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.வனவிலங்குகளை கட்டுப்படுத்தாத வனத்துறையினர், பெயரளவுக்கு நிவாரணம் வழங்கி, மக்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தங்களை அவமதிப்பதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.பல்வேறு நடைமுறை சிக்கல்களால், சிறு, குறு விவசாயிகள் சேதம் ஏற்பட்டாலும் நிவாரணத்துக்கு விண்ணப்பம் செய்வதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக, நிவாரணம் நிர்ணயிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என, உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நிரந்தர தீர்வு வேண்டும்

விவசாயிகள் கூறியதாவது: நீண்ட கால பயிரான தென்னை மற்றும் இதர பயிர்கள் பாதிக்கும் போது குறைந்த நிவாரணம் வழங்குகின்றனர். அந்த பயிர்களை பராமரிக்க ஆகும் செலவு, அதனால் கிடைக்கும் வருவாயை கணக்கிட்டும், நிவாரணம் வழங்க வேண்டும்.உதாரணமாக, ஒரு தென்னங்கன்றுக்கு, 100 ரூபாய்க்கும் குறைவாகவே நிவாரணம் கிடைக்கிறது. ஆனால், சந்தை விலையில், ஒட்டு ரக தென்னங்கன்று, 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.எனவே, வேளாண், தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய குழுவை வனத்துறையினர் ஏற்படுத்த வேண்டும். இதனால், பயிர் சேதத்தை துல்லியமாக கணக்கிட முடியும்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் சரியான நிவாரணம் கிடைக்கும்.இது குறித்து பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிரந்தர தீர்வாக, ஆனைமலை புலிகள் காப்பக எல்லையில், அகழிகளை துார்வாரி, சோலார் வேலி அமைக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை