உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரை நுாற்றாண்டுக்கு பின் ஓர் அரிய சந்திப்பு; காலத்தின் வழியே நினைவுகளை மீட்டு அசைபோட்ட முன்னாள் மாணவர்கள்

அரை நுாற்றாண்டுக்கு பின் ஓர் அரிய சந்திப்பு; காலத்தின் வழியே நினைவுகளை மீட்டு அசைபோட்ட முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது, ஆங்காங்கே நடப்பதுண்டு. ஆனால், கல்விப்பணியில் ஆசிரியர்களாக பணியாற்றிய முன்னாள் ஆசிரிய பயிற்சி பள்ளி மாணவர்கள் சந்திப்பு என்பது, அவ்வளவாக நடப்பது கிடையாது. காரணம், அவர்களை ஒருங்கிணைப்பது என்பது, சற்றே கடினமானது.தாராபுரம், நஞ்சியம் பாளையம், அரசினர் ஆதார ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், 1970 - 72ம் ஆண்டு களில், ஆசிரிய பயிற்சி பெற்றவர்கள், 39 பேர்; அவர்களில், 15 பேர் காலமாகி விட்டனர். அதனை தொடர்ந்து, 11 பேர், 53 ஆண்டு இடைவெளிக்கு பின் சந்தித்தனர். கல்வித்துறையில், பல்வேறு பொறுப்புகளை வகித்து, ஏராளமான மாணவ, மாணவியை உருவாக்கிய பெருமிதம் கொஞ்சமும் குறையாமல், சிறிய வட்டத்துக்குள் அமர்ந்து, பரஸ்பரம் தங்களுக்கு உரையாடினர்.

இனி கிடைக்காது

''மொத்தமா, 53 வருஷம் கழிச்சு உங்களையெல்லாம் பார்க்கிறதுல ரொம்ப சந்தோஷம். இத்தனை வருஷம் கழிச்சும், ஒருத்தருக்கு ஒருத்தர் அடையாளம் மறக்காம இருக்கோம் பாருங்க; இதுதான், உண்மையான நட்பின் அடையாளம். தள்ளாத வயதிலும் இளமை காலத்துக்கே சென்று திரும்பிவிட்டோம். வாழ்க்கையில் இதுபோல் ஒரு அனுபவம் இனியும் கிடைக்காது'' என நெகிழ்ந்தார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெகநாதன்.

இணைச்சது யாரு

''நம்ம எல்லோரும் அடிமட்டத்தில் இருந்து வந்தவங்க தான். நண்பர்களுடனான இந்த கலகலப்பான சந்திப்பு உண்மையில், எங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 'வாட்ஸ் ஆப்' போன்ற தொலை தொடர்பு சாதனங்களின் உதவியால எங்கள் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சி, எங்களை இணைச்சு வச்சிருக்கு,'' என்றார் ஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம்.

வெற்றி வந்த வழி

''வாழ்க்கையில் முன்னேற, முதலில் பொய் பேசுவதை தவிர்க்கணும். செய்யும் வேலையை முழு ஈடுபாடு, திருப்தியுடன் செய்யணும். ஒவ்வொரு மனஷனும் ஒழுக்கத்துடன் வாழும் போது தான், வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைய முடியும். ஒழுக்கம் தவறினால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது,' என்ற எங்கள் ஆசிரிய பயிற்சி பள்ளி தலைமையாசிரியரின் அறிவுரை தான் பசுமரத்தாணி போல எங்கள் மனதில் பதிந்தது; அதுதான், எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் திருப்தி, வெற்றியை கொடுத்தது'' என வெற்றியின் ரகசியம் பகிர்ந்தார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நாராயணன்.

மரியாதை கிடைத்தது

ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர் கோவிந்தசாமி பேசுகையில், ''நாங்க எல்லாரும் கல்வித்துறையின் ஒரு அங்கமா இருந்திருக்கோம். எங்களது, 2 வருஷ பயிற்சியில சுறுசுறுப்பு, நேரம் தவறாமை மற்றும் பிறருக்கு உதவும் குணத்தை கற்றுணர்ந்தோம். எங்களது ஆசிரியர் பணி அனுபவத்தில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். உளிபடாத கை சிலையாவதில்லை. ஆசிரியர்களிடம் அடி வாங்காத மணவன் நல்ல நிலைக்கு வருவது இல்லை என்ற ஆன்றோரின் வாக்குப்படி, செய்த தவறுக்கான தண்டனையை அவர்கள் உணரும் விதத்தில் எடுத்துச் சொல்லி குறைகளை ஆசிரியர்கள் களைந்தனர். ஆனால் இன்று, ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலையில் தான் மாணவர்கள் உள்ளனர்; இது வருத்தமளிக்கிறது,'' என ஆதங்கப்பட்டார்.

தவறான பார்வை

''அப்போதெல்லாம், வகுப்பறை துாய்மை முதல் பள்ளி வளாக துாய்மை வரை, மாணவர்கள் தாங்களாக முன்வந்து செய்தனர். இது, மாணவர்களுக்கு பொறுப்புணர்வையும், தங்கள் வீடு, சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தவறான கண்ணோட்டத்தில், மாணவர்களின் இதுபோன்ற பணிகளை மக்களிடம் தவறான பார்வையுடன் கொண்டு சென்று சேர்க்கப்படுகின்றன'' என குறைபட்டு கொண்டார் ஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபாலன்.

வாசிப்பது குறைவு

''இன்றைய சூழலில் மாணவர்கள் அனைத்து விஷயங்களையும், மொபைல் போன் வாயிலாக, இணையத்தின் உதவியுடன் அறிந்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கான கற்றல் ஆர்வம் குறைந்திருக்கிறது. வாசிப்பதில் உள்ள நாட்டம் குறைந்திருப்பதை உணர முடிகிறது. பாடங்களில் நாட்டமில்லை. கொரோனா காலத்தில் திணிக்கப்பட்ட இணைய வழிக்கல்வி, மாணவர்களின் ஞாபக சக்தியை மழுங்கடித்து, தவறான வழிக்கு அவர்களை அழைத்து செல்கிறது'' என, யதார்த்தத்தை உடைத்தார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சிங்கார வடிவேல்.

'ஆல் பாஸ் வேஸ்ட்'

''நாங்கள் படித்த காலத்தில் கவனச்சிதறல் என்பது பெரும்பாலும் இல்லை. தற்போது 'ஆல் பாஸ்' என்ற திட்டம், எக்காலத் திலும் மாணவர்களை அறிவுள்ள சமுதாயமாக உருவாக்காது. கல்வி கற்பித்தல் பணியை தவிர, மற்ற பணிகளையும் ஆசிரியர்கள் மீது திணிப்பது, கல்விப் பணியை பாதிக்க செய்யும் காரணிகளாகவே பார்க்கிறோம்,'' என்ற குறையையும் பலர் முன்வைத்தனர்.பல்வேறு இடங்களில் வசித்த இவர்களையெல்லாம் தன் இல்லத்துக்கு வரவழைத்து, உபசரித்து, அறுசுவை உணவு வழங்கி, ஓய்வெடுக்க வைத்து, குழு புகைப்படம் எடுத்து, அவர்களை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்து என, ஒட்டுமொத்த ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார், நஞ்சப்பா பள்ளியின் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் ராமலிங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை