குளங்களை பாதுகாக்க தேவை தனிக்குழு! மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா?
உடுமலை: குளங்கள் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புக்கென உள்ளாட்சி அமைப்புகளில், தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்பு குழு அமைத்தால் மட்டுமே, இரு ஒன்றியங்களிலும் எஞ்சியுள்ள குளங்களை பாதுகாக்க முடியும்.உடுமலை சுற்றுப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் உள்ளன.மழைக்காலங்களில், கிடைக்கும் தண்ணீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்த, குளங்கள், ஓடைகள் நுாற்றுக்கணக்கில் உள்ளன.கிராமத்திலிருந்து வெளியேறும் மழை நீர் முழுவதையும் சேகரிக்கும் வகையில், குளங்கள் உருவாக்கப்பட்டிருந்தது.ஆனால், இவற்றை முறையாக பராமரிக்காததால், பருவமழை பரவலாக பெய்தாலும், எந்த கிராம குளங்களுக்கும் போதிய நீர் வரத்து கிடைப்பதில்லை. உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், பொதுப்பணித்துறை, ஒன்றிய நிர்வாகங்களின் கீழ் பராமரிக்கப்படும் குளங்கள் பரிதாப நிலையில் உள்ளன.குளங்களை துார்வாரி பராமரிக்க, பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டும் முறையான கண்காணிப்பு இல்லாததால், ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் வீணடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஒவ்வொரு குளத்துக்கும் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், எவ்வித பலனும் இல்லை. பெயரளவுக்கு, குளங்களின் நீர்த்தேக்கத்தில், சிறிய குழிகளை ஏற்படுத்தி, நிதி ஒதுக்கீடு வீணாக்கப்பட்டுள்ளது.இதனால், குளங்கள் பழைய நிலையிலேயே, புதர் மண்டி, உறுதியளிப்பு திட்டத்துக்கான, தகவல் பலகை மட்டும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இதே போல், நீர்த்தேக்க பகுதியிலுள்ள, மண் மேடுகளை அகற்றும் வகையில், இலவசமாக வண்டல் மண் அள்ள, அரசு அனுமதியளித்தது.ஆனால், விவசாயத்துக்கு உதவாத, கட்டுமான மற்றும் ரோடு அமைத்தல் பணிகளுக்கான 'கிராவல்' மண்ணே அதிகளவில் குளங்களில் இருந்து அள்ளப்பட்டது.எனவே, பாறை போன்ற கடினப்பகுதியில் மழை நீர் தேங்காமல் விரைவில் வற்றி விடுகிறது. மழைக்காலங்களில் குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால், தொடர் மழை பெய்தாலும், பல குளங்கள் காய்ந்தே கிடக்கின்றன. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், போராடி பெறப்படும் தண்ணீரும், முறையாக பராமரிக்கப்படாத நீர் தேக்க பரப்பால், குறுகிய நாட்களால், காணாமல் போய் விடுகிறது.இத்தகைய அவலங்களால், நிலத்தடி நீர்மட்டம், உடுமலை பகுதியில் வெகுவாக குறைந்து விட்டது. வறட்சியால், தென்னை மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை கடந்தாண்டு ஏற்பட்டது.இந்தாண்டும் மழை நீரை சேகரிக்க காட்டப்படும் அலட்சியம், மீண்டும் வறட்சியை வரவழைக்கும் நிலையில் உள்ளது.எனவே, குளங்கள் பராமரிப்பு குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அக்கறை எடுத்து, அந்தந்த ஒன்றிய நிர்வாகங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளில், நீராதாரங்கள் பராமரிப்புக்கென தன்னார்வலர்களை உள்ளடக்கிய, சிறப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நடைமுறையை பின்பற்றினால் மட்டுமே இரு ஒன்றியங்களிலும், எஞ்சியுள்ள குளங்களை மீட்க முடியும்.