உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கன மழையால் நெற்பயிர்கள் சேதம் : அதிகாரிகள் குழு ஆய்வு

கன மழையால் நெற்பயிர்கள் சேதம் : அதிகாரிகள் குழு ஆய்வு

உடுமலை: அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர் கனமழை காரணமாக சேதம் ஏற்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. 130 நாட்கள் வரை வளர்ந்து அறுவடைக்கு தயாராக நெற் பயிர்கள் இருந்தன. கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக, குமரலிங்கம், கண்ணாடிபுத்துார் பகுதிகளில் மழைக்கு தாங்காமல் நெற் பயிர்கள் சேதமடைந்தன. வயல்களிலேயே விளைந்திருந்த தாள்கள் சாய்ந்ததோடு, நெல் மணிகள் சிதறி முளைக்கத்துவங்கின. ஏக்கருக்கு, 50 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்திருந்த நிலையில், பயனுக்கு வராமல் மழைக்கு பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மழைக்கு சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறுகையில், 'குமரலிங்கம் பகுதியில் மழைக்கு தாங்காமல் நெற் பயிர்கள் சேதமடைந்தது குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 13 விவசாயிகளின் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டது, கண்டறியப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிதி வாயிலாக இழப்பீடு வழங்கும் வகையில், உரிய ஆவணங்களுடன் மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி