வீணாகும் ஆடு வதைக்கூடம்; மக்கள் வரிப்பணம் வீண்
திருப்பூர்; திருப்பூர் நகராட்சியாக இருந்த போது, இறைச்சி கடைகள் பயன்பாட்டுக்காக, ஆடுவதைக் கூடம் தென்னம்பாளையம் வாரச் சந்தை வளாகத்தின் பின் அமைக்கப்பட்டது. நகரம் விரிவடைந்த நிலையில், ஆடுவதைக் கூடம் புதுப்பித்து விரிவாக்கம் செய்யப்பட்டது.கடந்தாண்டு மேலும், 44 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர், பேவர் பிளாக் தரை மற்றும் தெரு விளக்குகள் என அமைக்கப்பட்டது. மக்கள் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் செலவிட்டும் இந்த ஆடுவதைக் கூடம் உரிய கண்காணிப்பின்றி இயங்காமல் வீணாகக் கிடக்கிறது. பின்பற்றப்படாதநடைமுறை
இறைச்சி வியாபாரிகள் சுகாதாரமற்ற முறையில் தங்கள் இடங்களில் கால்நடைகளை வெட்டி விற்பனை செய்யும் அவல நிலை தொடர்கிறது. அதன் கழிவுகளை, அப்படியே சாக்கடைகளில் கலந்து விடுகின்றனர். இதனால், இறைச்சி கடை அருகில் சுகாதார கேடு நிலவுகிறது.ஆடு வதைக் கூடங்களுக்கு கால்நடைகளைக் கொண்டு வந்து, கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்று, வெட்டுவதற்கான கட்டணம் செலுத்தி, கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். அதற்கான முத்திரையும் வைக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை எதுவும் யாரும் பின்பற்றுவதில்லை. கிடப்பில் திட்டம்
ஆடு வதைக் கூடம் ஏலம் எடுக்கவும் யாரும் முன் வராத நிலை இருந்தது. தற்போது இந்தாண்டு 22 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆடுவதைக் கூடத்துக்கு கால்நடைகள் கொண்டு வரத் தயங்குவதால், வடக்கு பகுதியில் ஒரு கூடம் கூடுதலாக அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அந்த திட்டமும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.நான்கு மண்டலங்களுக்கு தலா ஒரு ஆடுவதைக் கூடம் அமைத்தால் கூட பயன்பாட்டுக்கு வரும். மேலும், இது குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொடர் கண்காணிப்பும் ஏற்படுத்தினால் மட்டுமே முழுமையாக கூடம் செயல்படும்; சுகாதாரமும் பாதுகாக்கப்படும்.