ஊராட்சியில் கையாடல் செயலர் மீது நடவடிக்கை?
திருப்பூர், : பா.ஜ., இளைஞரணி மாநில செயலாளர் யோகீஸ்வரன் தலைமையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு:குண்டடம் ஒன்றியம், சடையபாளையம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், பொதுமக்களிடமிருந்து கடந்த 2023 - 24 மற்றும் 2024 - 25ம் ஆண்டுகளில் வசூலித்த, 2.61 லட்சம் ரூபாய் வரி தொகையை வங்கி கணக்கில் செலுத்தாதது, கடந்த அக்டோபர் 14ம் தேதி நடத்தப்பட்ட தணிக்கையில் அம்பலமானது. ஊராட்சி செயலர் மற்றும் தலைவர் ஈஸ்வரன் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் என்பதால், விசாரணை நடத்தாமல் அதிகாரிகள் கரிசனம் காட்டுகின்றனர்.ஊராட்சி தலைவர், கண்துடைப்புக்காக, ஊராட்சி செயலாளர் மீது, குண்டடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். ஊராட்சி நிதியை கையாடல் செய்த செயலாளரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். விசாரணை முடியும்வரை எவ்வித செலவினமும் செய்யாதவகையில் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) நாகராஜனிடம் கேட்டபோது, ''சடையபாளையம் ஊராட்சி செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பி.டி.ஓ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.