கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி சேர்ப்பு
திருப்பூர்: கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்துார், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) இயக்கப்படுகிறது. காலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில் மதியம், 12:45 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 09:05 மணிக்கு கோவை வந்தடைகிறது. கோவை - திருப்பூர் - ஈரோடு வழித்தடத்தில் இயங்கும் ஒரு இரண்டடுக்கு (டபுள்டெக்கர்) ரயில் இதுவாகும். 'ரயிலில் முன்பதிவு பெட்டி மட்டுமே உள்ள நிலையில், இந்த ரயிலில் ஏ.சி.யுடன் கூடிய இருக்கை முன்பதிவு பெட்டி வேண்டும்,' என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், தற்போதுள்ள இரண்டடுக்கு பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, புதிதாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி பெட்டி, 2026 ஜன. மாதம் முதல் சேர்க்கப்பட உள்ளது; இதற்கான டிக்கெட் முன்பதிவு குறித்து அறிவிக்கப்பட உள்ளது. சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ஜன. 20 முதல் மே, 19 வரை சோதனை முறையில், ஏ.சி. இருக்கை வசதி பெட்டி சேர்க்கப் படுகிறது. டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்ப அடுத்த ஆறு மாதங்கள் கழித்து, பெட்டி தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும்,' என்றனர்.